Saturday 4 August 2012

...தரிசு நிலம்...

ஏழு வருசமாச்சே;
இந்த வெறுஞ்சிறுக்கி
வயித்துல - ஒரு
புழு பூச்சி உண்டாச்சா?

தன் வயதொத்த
தோழியிடம்
அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்;
தங்கையனின் தாய்
அங்கம்மாள்...

ஆம்...
தங்கையனுக்கு
திருமணமாகி;
புரட்டாசி வந்தால்
வருடம் எட்டு!

புத்திர சோகத்தில்
நித்திரையின்றி
நித்தம் தவித்த 
தங்கையன் ரெத்தினம் 
தம்பதியினர்;

சுற்றாத மரமோ
செல்லாத கோயிலோ
வேண்டாத கடவுளோ
இல்லையென்றே
சொல்லவேண்டும்!

குறுவைக்குக்
காத்திருக்கும்
கழனியைப்போல;
குறுக்கும்
நெடுக்குமாய் வெடித்த
வயல்வேளியாகவே
வாழ்க்கையும் ஆனது...

வானம் பார்த்த
பூமிக்கு சொந்தக்காரன்;
வக்கற்றிருப்பது
வழக்கம் தானே?

குழந்தையுமில்லை
குறுவையு மில்லாததால்
இவ்வருடம்
மகிழ்ச்சியுமில்லை
மகசூலுமில்லை - அந்த
மாட்டுக்காரப் பயலுக்கு...

பாலைக்கொண்டு
பிழைப்பு நடத்திய
பாவப்பட்டவனைக் கண்டு
மாரியாத்தாள்
மனமிறங்கினாள் போலும்!

எலிவெட்டுக்காக
எடக்குமுடக்காக
துண்டாடப்பட்டிருக்கும்
வரப்பையும் - தன்
வாழ்க்கையையும்;
ஒப்பிட்டுப் பார்த்தபடியே
ஓலைக்குடிசை நோக்கி
ஓங்கி நடந்தான்...

வாசலில்
வெற்றிலை
குதப்பிக்கொண்டிருந்த
அங்கம்மாளைப் பார்த்ததும்
வந்தவேகம் பாதியாய்
குறைந்தது...

பாவம்;
குடிசையில்
காத்திருக்கும் செய்தியை - அந்தக் 
காட்டுப்பயல் அறிந்திருக்கவில்லை...
(தழைக்கும்...)

Monday 30 July 2012

...மறுக்கப்பட்ட நீதி...

இரக்கமென்ற
பொருளற்றவன்...

இங்கே
இராமனாக
வணங்கப்படுவான்!

ஈசனாக
பூஜிக்கப்படுவான்!

நாயனாராய்
நமஸ்கரிக்கப்படுவான்!

கண்ணனாகக்
கொண்டாடப்படுவான்!

ஆச்சாரியராக
அறியப்படுவான்!

முனிவராகப்
போற்றப்படுவான்!

க்ஷத்ரியனாக
சேவிக்கப்படுவான்!

தேவர்களாகத்
தொழப்படுவார்!

அதுவே
தமிழனாய் இருந்தால்?
தீர்மானமாய்
தண்டிக்கப்படுவான்!!

தவம் புரிந்த சம்புகனின்
தலையெடுத்த!
கொலையாளி இராமன்
தெய்வமானான்...

பசியாறிய குற்றத்திற்காக
பலநூறு பேரோடு;
பச்சிளங் குழந்தையை
இரண்டாய்ப் பிளந்த!
கொடூரன் கோட்புலி நாயனார்
சேக்கிழாரானான்...

தலைப்பிள்ளை கறிகேட்ட!
தறிகெட்ட சிவனடியார்
சிறுத்தொண்டரானான்...

குருதட்சணையாய்(?!)
கட்டைவிரலை கேட்ட
கேடுகெட்ட துரோணர்
ஆச்சாரியரானான்...

பெற்றெடுத்த தாயின்
தலையை கத்தரித்த!
கொடிய பரசுராமன்
க்ஷத்ரியனானான்...

அறவே இரக்கமின்றி
அரிச்சந்திரனை ஆட்டிவைத்த
வன்னெஞ்சன் விசுவாமித்திரன்
முனிவரானான்...

தர்மத்தின் பெயரால்!
இவற்றையெல்லாம்
ஞாயப்படுத்திய இவ்வுலகம்...
தமிழனுக்கு மட்டுமே(?)
தண்டனை தந்ததில்
ஆசுவாசம் அடைந்துகொள்கிறது!

வீரன்,
தவசி,
கலைஞன்,
தமிழன் இராவணன் - இறுதியில்
தமிழரிடமே அரக்கனானான்!!

நீதி
முக்காலமும் - எமக்கு
மறுக்கப்படுவது
எங்கனம் ஞாயம்?

ஆரியத்தின்
அ(த்)தர்மத்தை - சற்று
தள்ளியே வையுங்கள்...
- பத்மா சுவாமிநாதன்
...கேள்வி...

வழக்கமான
அலுவல்கள் முடித்து;
வாடிக்கையான - அந்த
கடையில் தேநீர் அருந்தி...

திருமங்கலம்
தாண்டியதும்
தடைபட்டது பயணம்...

வாகனத்தின்
விசை நரம்பு(Accelerator Cable) - தன்
ஆயுட்காலம் முடிந்து
அறுந்தேபோனது...

நல்லவர்களை
சோதிக்கும் ஆண்டவன் - என்னை
தவறாகப் புரிந்துகொண்டார் போலும்!

அடுத்த
அரை மணிநேரத்தில்
எடுக்க ஆயத்தமானது வண்டி!
இயந்திரக் கைவினைஞர் (Mechanic)
அய்யனார் தயவால்...

வீறுகொண்டு
கிளம்பிய - எந்தன் வாகனம்;
மீண்டும் நிறுத்தப்பட்டது
திருமுல்லைவாயல்
அருகே...

சட்டம் ஒழுங்கு
காவலர்கள்!
தம் பணியை(?)
செவ்வனே
செய்துகொண்டிருந்தனர்...

மரியாதை நிமித்தம்
கீழிறங்கி;
ஓட்டுனர் உரிமம்
பதிவுச் சான்றிதழ்
காண்பிக்கப்பட்டன...

வேலைசெய்யுமிடம்
வீட்டின் முகவரி யாவும்
கோரப்பட்டதின் பேரில்
கொடுக்கப்பட்டன...

நான் சார்ந்த
நிறுவனத்தையும்
பதவியையும் கேட்டுக்கொண்டவர்
மரியாதையாகவே வினவினார்
அது என்ன சார்
"ஸ்டாப் டெத் பெனால்டி" என்று?
(வண்டியில் எழுதியிருக்கும் வாசகம்)

மரண தண்டனைக்கெதிரான
மக்கள் இயக்கத்தைப்பற்றியும்
அதன் மீதான எனது
கருத்தையும் சொன்னேன்...

நேரம் நீ...................ண்டது
வசூலுக்கு இடையூறாக
இருந்த என்னை;
உசாராகவே அனுப்ப முயன்றார்
அந்த ஆண் காவலர்...

உடனிருந்த
பெண் காவலர்
சொன்னதுதான்
சற்று அடடே ரகம்...

சாருக்கு சமூக சிந்தனை
ரொம்ப அதிகமோ?
என்றார்!

அது என்
உரிமை என்றேன்...
மறுபேச்சுக்கு வழியில்லை!

பொத்திக்கிட்டு
போறவன்தான்
பொதுஜனம்!
என்று நினைக்கிறார்களா?

அல்லது
சாமானியனுக்கு
சமூகம் பற்றிய சிந்தனை
ஏனென்று எண்ணுகிறார்களா?

என்னை
தூங்கவிடாத
கேள்வி?
- பத்மா சுவாமிநாதன்
...நீயும் நானும்...

புலிகளுக்காக
காப்புக்காடுகள் அமைத்து
பராமரிக்கும் - இதே
நாட்டில்தான்!

தற்கொலை
செய்துகொள்ளும்
விவசாயி...

பள்ளிசெல்லும் வயதில்
பாத்திரம் கழுவும்
சிறார்கள்...

கூட்டு
பலாத்காரத்திற்கு
பலியாகும் பெண்...

கள்ளக் காதலிக்காக
மனைவியைக் கொல்லும்
கணவன்...

ஓட்டுப்போட்டவனை
ஓட்டாண்டியாக்கும்
அரசியல்வாதி...

குடிமகனின்
குறைகேட்காத
அரசு...

எது நடந்தால்;
எனக்கென்ன எனும்
நீ, நான்...

- பத்மா சுவாமிநாதன்
...மற்றவை வழக்கம்போல்...

பிறரைப் போலவே
பிறந்தோம்...
வரையறுக்கப்பட்ட
வாழ்க்கை முறைப்படி
வளர்ந்தோம்...

வெற்றியென்ற - ஒற்றை
இலக்குநோக்கி
வெறித்தனமாய்
ஓடுகிறோம்...

பூங்குயில் ஓசையும்
பூவையர் வாஞ்சையும்
போகிற வழிதனில் - சற்றே
இளைப்பாற்ற...

மீண்டும்
ஓட்டமெடுக்கும்
இந்த நாய்பிழைப்பின்
நோக்கமென்ன;
பொதுநலன் சார்ந்தா
இருக்கப்போகிறது?

இனியொரு முறை
எப்படி இருக்கிறாயென
யாரும் கேட்டுவிடாதீர்!

சகமனிதர்கள் சாகும்போதும்
சுயநலமாய் சிந்தித்த - இந்த
சாமானியன் வாழ்வில்
சாதனைகளா நிகழ்ந்துவிடும்?

மற்றவை
என்றுமே;
வழக்கம் போல்...

உண்போம்
உடுத்துவோம்
உறங்குவோம்
மறவாமல்;
இனவிருத்தி செய்வோம்
அவ்வளவே...
- பத்மா சுவாமிநாதன்
...அப்பாக்கள் மாறுவதேயில்லை!...

எனக்கு
விளக்கம் தருகிற - உந்தன்
தோனியில் மட்டுமே
மாற்றமிருப்பதாய் உணர்கிறேன்...

"இப்ப உனக்கு இது புரியாதுப்பா"
எனும்போதே புரிகிறது;
உன் பிள்ளைமீதான
இச்சமூகத்தின் பார்வை
எப்படியிருக்கவேண்டுமென
நீ பிரயத்தனப்படுவது!!

இன்னும் என்னவெல்லாம்
இருக்கிறதோ உன்னிடம் கற்றுக்கொள்ள!

மறக்காமல் அனைத்தையும்
சொல்லிக் கொடுத்துவிட்டுப் போ...
உன் பேரனை
உன்னைப்போலவே
வளர்க்கப் பயன்படட்டும்!!
- பத்மா சுவாமிநாதன்
...முத்தமும் மழையும்... 
முதல் துளி
மழை - என்
முகம்தனை
தொடுகையில்...

இதழ் கொண்டு
நீ - எந்தன்
இமை தொட்ட
ஞாபகம்...

முற்றும்
நனைத்துவிட்டுப் போ!
இல்லையேல்
மூச்சடைத்துப் போவேன் நான்!!
- பத்மா சுவாமிநாதன்
...தெரியாது எங்களுக்கு...

இதைப்போலவே ஓர்
இனிய காலைப்பொழுது...

அன்றும் வழக்கம்போல்
இயந்திரமாய்
இயங்கிக்கொண்டிருந்தாள்...

எந்த ஜென்ம பாவத்தையோ
எங்களிடம் தெத்துவதற்கு
அடுப்படி அலுவலில்
அமர்ந்திருந்தவளிடம் கேட்டேன்...

"அம்மா இன்னைக்காவது"
தோச சுட்டுத் தருவியான்னு!
சாணியள்ளி கொட்டிடுறேன்...
நெல்ல காயவச்சி;
மழுங்க அரைச்சி குடுக்குறேன்...
வெள்ளாட போமாட்டம்மா...

அவள்
சுட்டு அடுக்கும் தோசைக்காக
நான் சுடச்சுட அடுக்கிய
வாக்குறுதிகளை
கேட்டுவிட்டு;

தன் கண்ணிரண்டும் ஊற்றெடுக்க
முந்தானையால் துடைத்தவள்
என் தலைவருடிச் சொன்னாள்...

அப்பா அனுப்புன பணம்
நாளைக்கி வந்துடும் ஆயி...
இன்னைக்கி மட்டும்
பழையது சாப்புடு!
என் செல்ல புள்ளயில்ல!
என் தங்க புள்ளயில்ல!
என் அப்பால்ல!
என்று...

அப்பா பணமனுப்ப
ஆறு மாதங்களாயின...
அரைவயிறும்
கால்வயிறும்
பிள்ளைகளுக்கும் நிறைந்தது...
அவளுக்கு மட்டுமே
"அல்சர்" வந்தது...

அதுவரை
தெரியவேயில்லை
அம்மா சாப்பிடும் நேரம்!
- பத்மா சுவாமிநாதன்
... அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா...

வள்ளுவர் கோட்டம்
வாகன நேரிசலானால் - சுற்றி
வளைத்து செல்ல
சாலைகளா இல்லை?

வண்டியை திருப்பு
வலக்கையை முறுக்கு
வந்துவிடப்போகிறது
வடபழனி!!!

நீ செல்லும்
சாலையில் - பூஞ்
சோலை ஒன்றிருக்குமே?
அதையும் பார்த்துவிட்டு போ...

சோலையை விட்டு
சாலையை கடக்கும் - அந்த
பட்டாம்பூச்சியை பார்க்கையில்
தலைகோத மறவாதே...

அளவாய் இடைவெளிவிட்டு
அழகாய் ஊர்ந்துசெல்லும்
கார்களின் இடுக்கில் சொருகி - உந்தன்
சாகசத் திறமையை காட்டு...

இவையாவும் முடித்து - நீ
இல்லம் நுழையும்போது;
எவரேனும் சொல்லக்கூடும்!

வள்ளுவர்கோட்டத்தில்
வயதான உன்தந்தை
மயங்கி விழுந்ததையும் - சிலர்
மீட்டு வந்ததையும்!!

சந்து பொந்துகளை
தெரிந்துவைத்து என்ன பயன்?

சாகசம் காட்டி
சாலையில் சென்று - நீ
சாதிக்கப்போவதுதான் என்ன?
...காட்சிப்பொருட்கள்... 

தமிழரைத்
தமிழனே
ஆள வேண்டுமென்போர்;
திருமாவை தலைவனாக
ஏற்றுகொள்ளப்போவதும் இல்லை!

திராவிடம் பேசும்
வீரத் திலகங்கள் - ஒருபோதும்
வைகோவிற்கு வாய்ப்புதரப்
போவதும் இல்லை!!

அவரர் அரசியல்
ஆதாயத்திற்காக
அவ்வபோது வரும்
தமிழர் நல முழக்கங்கள்;
அறுபது ஆண்டுகளாய்
அள்ளிவீசப்படுவதும்...

ஆட்சிக்கு வந்தபின்
அவைகள்
கிள்ளிவீசப்படுவதும்
நமக்குத் தெரியாதா என்ன?

மக்கள் நலனில்
அக்கறையிருந்தால்?
ஓரணியில் வந்து நில்லுங்கள்
உங்கள் பின்னே உலகம் நிற்கும்...

அதைவிடுத்து
பெரியாரை கன்னடன் எனும்
உங்கள் அரசியல் முழக்கங்களும்...

இல்லாத ஒன்றை
இருட்டில் தேடுகிற
உங்கள் திராவிடமும்...

வேடிக்கை
பார்க்கப்படுமேயன்றி
வேலைக்காகாது!
- பத்மா சுவாமிநாதன்

...போடா போடா புண்ணாக்கு...
 
அப்பாவித் தமிழர்கள்
அழித்தொழிக்கப்பட்டபோது
அமைதிகாத்து நின்ற
அடிவருடிகள்...

அன்றாடம் மீனவர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டபோது
கூட்டணி தர்மம்
காத்த கயவர்கள்...

இனப்படுகொலைக்கும்
இனவெறிக்கும் எதிராக
பேசுவதே பெருங்குற்றமென்றும்;
மீறுவோர் மீது
தேசிய பாதுகாப்பு
சட்டத்தைப் பாயவிட்ட
பயங்கரவாதிகள்...

நிர்பந்திக்க வேண்டிய
நேரத்திலெல்லாம்;
இராஜபக்செவுக்கும்
சோனியாகாந்திக்கும்
வாலாட்டி நின்ற நீங்கள்!
இன்று
நடத்தும் போராட்டம்
பொதுநல நோக்கம் கொண்டதென்று
சொல்வது தான் - இந்த
நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை!!

கட்சிக்காரர்கள்
கைது செய்யப்படுவதைக்
கண்டிக்கவேண்டுமேன்பதே - உங்கள்
போராட்டத்தின் பிரதான நோக்கமென்பதை
இவ்வுலகம் நன்கு அறியும்...

மண்டபத்தில்
முழு ஆந்திரா சாப்பாடு
தருகிறார்களாம்!
மூக்குபிடிக்க சாப்பிட்டு வந்து
முழங்குங்கள் - உங்கள்
தொலைகாட்சியில்!!

...கண்ணை விற்று ஓவியம் வாங்கு...

அப்பளம்
விற்பதற்கு கூட
அமெரிக்க புகழ் தேவைப்படும்
காலக்கொடுமை...

"உலகத்தரம்" என்ற
ஒற்றை வாக்கியமே - இன்றைய
உற்பத்தியாளரின்
தாரக மந்திரம்...

ஐ.எஸ்.ஒ சான்றிதழ்கள்
அத்தனையும் - இன்று
அண்ணாச்சி கடைகளில்
கிடைத்திடும் வேளையில்;

எது உலகத்தரம்?
யார் அதனை
வழங்குவது?

குக்கர் முதல்
நிக்கர் வரை!
கட்டுமான கம்பி முதல்
காண்டம் பாகெட் வரை!!

அனைத்தும் இங்கே
உலகத்தரம் - ஆனால்
உண்மைநிலையோ
வேறு கதை...

உலகத்தரத்தை நாடும்
உள்ளூர் தோழர்கள்;
"பிராண்டட்" மோகத்தின்
பிரதிபலனாய் பெற்றது
ஏதுமில்லை!

ஆனால்...
புறக்கணித்ததின்
பலனாய் புதையுண்டு போன
நிறுவனங்கள் ஏராளம்!!

உள்ளூர் உற்பத்தியை
ஒழித்திவிட்டு!
விலையுயர்ந்த ஆடைகளை
வாங்கியணிந்தால்
வல்லரசாகலாம் என்று - எந்த
வெள்ளைக்காரன் சொன்னானோ?
விளங்காதவர்களுக்கு!

காதியில் கிடைக்கும்
கதர்சட்டையை - நம்மில்
எத்தனை பேர்
வாங்குகிறோம்?

ஆனால்...
ஆலன்சோலியும்
ஆக்ஸம்பெர்கும் - நிச்சயம்
அனைவரிடமும் இருக்கும்

கண்ணை விற்று
ஓவியம் வாங்கியபின் - நாம்
காணப்போவது எதை?

- பத்மா சுவாமிநாதன்
...கரை திரும்பாக் கட்டுமரம்...

வழக்கமானதொரு
இரவென்றே - அன்று
வேலைக்கு புறப்பட்டான்
குமரன்...

வழியனுப்ப
வாசல்வரை
வந்தவளை - அவன்
திரும்பிப் பார்க்கவில்லை!

இடையூறு எத்தனை
இருப்பினும்;
இடிபாடுகளோடே இயங்கும்
இயந்திர வாழ்க்கை அவனுக்கும்...

கிளம்பும்போது
குறித்துக்கொண்டான்
கற்பமுற்றிருக்கும் கயல்விழிக்கு
குங்குமப்பூ வாங்கித்தர...

ஆழ்கடல் சென்றபின்னும்
ஆழ்மனதில்
அவள் நினைவு!

கட்டுமரக்காரனுக்கு
காதலொரு கேடா? - என
ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றுகூடி கேட்டது முதல்...

தடைகளைத் தாண்டி
திருமணம் முடித்து;
தனிக்குடித்தன
ததிங்கினதோம் வரை...

மாம்பழம் துளைதிடும்
வண்டாய் - நினைவுகள்
மூளையை துளைத்தபோது;

சற்றும்
எதிபார்க்கவில்லை
எதிரி எய்திய குண்டு - அவன்
இதயத்தை துளைக்குமென்று!

...கண்மூடிய பயணம்...

இறுக்கத்தோடே
இயக்கமானேன்
இன்றுகாலை...

சிந்தையுள் கிடக்கும்
சிக்கு கோலங்கள் பற்றி
சிந்தித்தவாறே - பல
சிக்னல்களும் கடந்தன...

சாலையில் செத்துக்கிடந்த - தெரு
நாயோன்றும் சேர்ந்துகொள்ள;
நாயை கொன்றவனை
நாவால் நான் கொன்றேன்...

காலை வெயில்,
கனரக வாகனங்கள்,
காட்டுமிராண்டி ஓட்டுனர்கள்,
காது கிழிக்கும் ஹாரனென;

விழிகளில்
பட்டவரெல்லாம்,
விலங்கினமாய்
தோன்றியதனூடே;

முன்சென்ற வாகனத்தில்
புன்சிரிப்போடோர் குழந்தை
கையசைத்து பேசுகையில்...

காற்றில் பறக்கும் இறகாய்!
மாற்றுரு பெற்றது மனது!!

இயற்கை படைப்பினில் தான்
எத்தனை அதிசயங்கள்?
இடர்களிலும் இன்பம் தேட
இருக்குதிங்கே இரகசியங்கள்!!

குறைகளை தேடும்
குணம் கொண்டதாலே!
குதூகலமாய் வாழ்வை
கொண்டாடத் தவறுகிறோம்!!

குற்றம் தேடி
சுற்றம் துறந்து - இங்கே
சாதிக்கபோவது எதுவுமில்லை...

கதவைத் திற
காற்று வரட்டும்!
கண்களை திற
கவலைகள் அகலட்டும்!!
- பத்மா சுவாமிநாதன்
...பூ...

விதையின்றி
வேரின்றி
செடியின்றி
பூக்கும் பூவை
யாருக்கேனும் தெரியுமா?

வெயிலையும்
மழையையும்
பொருட்படுத்தாது...

வெட்ட வெளி
பொட்டல்களை
விளை நிலங்களாக்கி!

வெட்டிபேச்சு
வீணருக்கும்;
விரட்டியடிக்கும் - இவ்
உலகுக்கும்;
உணவளிக்கிறானே!

அந்த
உழவன்
உடம்பில்
உலரும் பூ...

உதிரம்
உருகி
மலரும் பூ...

பூப்பது
ஓரிடத்தில்!
காய்ப்பதும்
கனிவதும் வேறிடத்தில்!!

உற்பத்தியாளன்
ஊழியத்திற்கு;
விற்பனையாளன்
ஊதியம் தேடுதல்!

உலகம் உருவான
காலம் தொட்டு;
நீயும் நானும் பார்க்க
நிகழும் நிதர்சனம்...

காரணத்தை
சிந்திப்போம்!
பூக்குமிடமே
காய்க்கட்டும்!!

உழைப்பாளர்
வாழ்வு
சிறக்கட்டும்!!!

அனைவருக்கும் இனிய
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்...

-பத்மா சுவாமிநாதன் 
...ஏட்டுச்சுரைக்காய்...
நீங்கள்
பெரியார் பாசறையில்
பயின்றதனால் என்ன பலன்?

கார்ல் மார்க்ஸை
கரைத்து குடித்ததனால்
என்ன பயன்?

அண்ணல் அம்பேத்கரை
அறிந்திருந்து என்ன நலன்?

சே குவேரா சரித்திரத்தை
சேகரித்து வைத்து;
நீங்கள் செய்தது தான் என்ன?

சாதிய!
முதலாளித்துவ!!
சர்வாதிகார!!!
சிந்தனை கொண்ட - உங்கள்
மேதாவி மூளையை;
கொண்டுபோய்
குப்பையில் போடுங்கள்...

தேவைக்குதவாத
தற்பற்றார்ந்த ஞானம்
தீப்பற்றி எரியட்டும்...

-பத்மா சுவாமிநாதன்
மாற்றமிலா மாற்றம்..

விழுப்புரத்தில்
பழங்குடியினப் பெண்கள்;
பெரியகுளம் வசந்தி - என்று
காக்கிகளால் மானபங்கம்
செய்யப்படும் ஏழைகள்...

பரமக்குடி,
நாங்குநேரியென
தொடரும் என்கௌன்ட்டர்
படுகொலைகள்...

இவற்றையெல்லாம்
பற்றி எள்ளளவும்
கவலையின்றி எப்படித்தான்
காற்றுவாங்க முடிகிறதோ - உங்கள்
புரட்சித்தலைவியால்?

பலாத்காரம் செய்வோருக்கு
பணியிடை நீக்கமும்!
படுகொலை செய்வோருக்கு
பெயருக்கு ஒரு விசாரனையும்!
பாதிக்கப்பட்டோருக்கு
பலனளிக்குமா?

போலீசாரை எதிர்த்து!
இம்மக்களின் போராட்டம்
வெற்றிபெறுவதை விட;
இவர்களை வாழவிடுவார்களா
என்பதே என் கேள்வி?

அழுகின்ற குழந்தையை
அரவணைப்பவளே!
"அம்மா" எனப்படுபவள்...

அழுகை தானாய்
அடங்கும்வரை
அந்நியமாய்
நிற்பவளல்ல!!

ஆட்சியும்
அதிகாரமுமே - உங்கள்
குறிக்கோளாக இருப்பின்!

தேர்தலும்
வாக்குகளுமே - எங்கள்
பதிலாக இருக்கும்!!
- பத்மா சுவாமிநாதன்
துரோகிகள் சூழ் தரணி...

எத்தனை தலைமுறைகள்
எதிர்த்து நின்று போராடினாலும்
வெற்றி உனக்கு;
எட்டாக்கனியே!

உங்கள் குறிக்கோள்
உயரிய நோக்குடையதாக
இருக்கலாம்...

உயிரைத் துறக்க
ஓராயிரம் பேர்
ஒன்றுபட்டு நிற்கலாம்...

உங்களோடு - ஓர்
நயவஞ்சகன் இருப்பானேயானால்
கழுத்தறுக்கப்படுவது உறுதி...

கொள்கைகளை விற்று
கட்சி நடத்தும்
ஒருவனிடத்தில்;
நீங்கள் கொண்ட நம்பிக்கை!
அவனுக்கே வியப்பாக
இருந்திருக்கும்...

தனி ஈழம் கோரினால்?
கணிவாழ்வது சிறையிலென்று!
செட்டிநாட்டார் சொல்கையில்
மறுக்கவா முடியும்?

பாவம் விட்டுவிடுங்கள் - அந்த
கிழப்பாம்பையும்;
அது கக்கி வைத்திருக்கும்
டெசோவையும்...

இனியாவது
போர்களத்துள்
பாம்புகள் வராது
பார்த்துக்கொள்வோம்!

- பத்மா சுவாமிநாதன்
பாரதத்தின் பிரிவினைவாதம்...

என்று
இவ்வுலகின்
ஏதேனும் ஓர் மூலையில்
எம்மினம் பலிகொடுக்கப்
படவில்லையோ?

அன்று வந்து
எம்மிடம் சொல்லுங்கள்
"தமிழ்தேசியம்" தவறென்று...

வங்கக்கடலில் - சுட்டு
வீழ்த்தப்படுவோர் தமிழராம்!
உலக சதுரங்க வீரர்
விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியராம்!!

இந்தியத்தின்
இனவெறி அரசியலை
என்னவென்று சொல்வது?

Friday 29 June 2012

முற்றத்து தாவரங்கள்...

நேற்று வரை
என் வரவிற்காக - அவை
காத்திருந்ததாகவும்;
அவ்வபோது
தலையசைத்து
என்னுடன் பேசுவதாகவும்
எண்ணிக்கொள்வேன்...

இன்புற்றிருக்கும்
மனிதனைப் பார்த்தால்
எப்படித்தொன்றுமோ
இயற்கைக்கு?

முந்தாநாள்
மாலைப் பொழுதில்
முற்றத்தை நிரப்பிய மழை - சற்று
மகிழ்ச்சியை தந்தாலும்!

எங்களுக்குள் ஏற்பட்ட
இடைவெளியையும் - அதை
ஏற்படுத்திய இம்மழையையும்
வெறுக்கவே செய்கிறேன்?

இப்போது
நன்கு புரிகிறது!
மகனுக்குத் திருமணம் முடித்த
ஓர் தாயின் வேதனை...

Thursday 28 June 2012


மானுடம் என்பது...


ஆளில்லா வழித்தடத்தில்
அன்புக்குரியவளைக்
கட்டியணைக்க
காட்டும் அவசரம்...

காமசூத்திரக் 
கலையனைத்தும் 
கட்டியவளிடம் காட்டத்
துடிக்கும் ஆர்வம்...

ஈன்ற குழந்தையின் 
எச்சில் சோற்றை
உச்சுக்கொட்டி சுவைக்க 
ஏங்கும் ஆவல்...

போட்டியாளனைப்
பின்னுக்குத்தள்ளி
வெற்றி பெற்றிட
உந்தும் வெறி...

பொறுப்புகளை முடித்து
விரைவாய் இளைப்பாற
இயற்றும் வரைவு - அதனோடு
இயங்கும் செயல்... 

இவற்றோடு
நின்றுவிடுவதில்லை
இப்பிறப்பின் நோக்கம்!

கண்முன்னே நிகழும்
கொடுமைகள் கண்டு
குரலெழுப்பாத நீயும்;
கள்வர்களைக் கண்டு
குரைக்காத நாயும் ஒன்றே!!

பிறகு
உனக்கெதற்கு 
ஆறறிவு;
ஆராய்ந்து பார்த்து
அழிவைத்தரவா?

Wednesday 27 June 2012

 
விளம்பரதாரர்களுக்கு
விற்கப்படும் வாசகர்கள்


---

கட்டுமரக்காரனின்
மரணத்தை விட;
கள்ளக்காதல் விவகாரத்திற்கு
முக்கியத்துவம் தரும்
ஊடகங்களை!

வறுமையின்
பிடியில் சிக்கி;
வேறு வழியின்றி
பாலியல்தொழில் செய்யும் - ஓர்
பெண்ணின் புனிதத்தோடு
ஒப்பிடுதல் முட்டாள்தனம்!!

இவள் விற்பது
தன்னை...
அவன் விற்பது
உன்னை...

கார்பரேட் நிறுவனங்களுக்கு - உன்
பெருமூளை விற்கப்படுவது
உனக்குத்தான்
புரிவதேயில்லை!!!