Monday, 30 July 2012


...கண்மூடிய பயணம்...

இறுக்கத்தோடே
இயக்கமானேன்
இன்றுகாலை...

சிந்தையுள் கிடக்கும்
சிக்கு கோலங்கள் பற்றி
சிந்தித்தவாறே - பல
சிக்னல்களும் கடந்தன...

சாலையில் செத்துக்கிடந்த - தெரு
நாயோன்றும் சேர்ந்துகொள்ள;
நாயை கொன்றவனை
நாவால் நான் கொன்றேன்...

காலை வெயில்,
கனரக வாகனங்கள்,
காட்டுமிராண்டி ஓட்டுனர்கள்,
காது கிழிக்கும் ஹாரனென;

விழிகளில்
பட்டவரெல்லாம்,
விலங்கினமாய்
தோன்றியதனூடே;

முன்சென்ற வாகனத்தில்
புன்சிரிப்போடோர் குழந்தை
கையசைத்து பேசுகையில்...

காற்றில் பறக்கும் இறகாய்!
மாற்றுரு பெற்றது மனது!!

இயற்கை படைப்பினில் தான்
எத்தனை அதிசயங்கள்?
இடர்களிலும் இன்பம் தேட
இருக்குதிங்கே இரகசியங்கள்!!

குறைகளை தேடும்
குணம் கொண்டதாலே!
குதூகலமாய் வாழ்வை
கொண்டாடத் தவறுகிறோம்!!

குற்றம் தேடி
சுற்றம் துறந்து - இங்கே
சாதிக்கபோவது எதுவுமில்லை...

கதவைத் திற
காற்று வரட்டும்!
கண்களை திற
கவலைகள் அகலட்டும்!!
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment