Wednesday 20 April 2011

குறும்படம்...


வீதியெல்லாம் பட்டாசு சத்தம்!
விண்ணதிர வாணவேடிக்கைகள்!
ஊரே கொண்டாட!
ஒருவன் மட்டும் தனித்திருந்தான்...
வழிமேல் விழிவைத்து
...இருவிழியும் பூத்திருந்தான்....

விளக்கும் வைத்தாயிற்று
வரவில்லை அப்பா...
கட்டம் போட்ட சட்டை!
கருப்பு கலர் பேன்ட்!
மத்தாப்பு பெட்டி!
மிரளவைக்கும் சரவெடி - இன்னும்
எத்தனையோ வருமென நம்பி
ஏங்கியவன் தூங்கிவிட்டான்...

பொழுதும் புலர்ந்தது
பண்டிகையும் நாளும் மலர்ந்தது....
கட்டம் போட்ட சட்டையுமில்லை
கருப்பு கலர் பெண்ட்டுமில்லை...
அப்பாமட்டும் அமர்ந்திருந்தார்
அவர் மடியில் பணமுமில்லாமல்....

அழுது புரண்டான்
அடுத்த நாள் பள்ளிக்கு
அனைத்து நண்பர்கள்;
புது துணியோடு
பள்ளிக்கூடம் வருவார்களே...
அது ஒன்றே அவன் கவலை....

புதியதைப்போல
இருந்தது ஒரு சட்டை...
பிழைத்துக்கொள்ள
பிறந்தது யோசனை....
ஊதுபத்தி துணையோடு
ஒட்டைபோட்டான் சட்டையிலே...

பட்டாசு பட்டதனால்
புதுசட்டை போனதென்று!
பள்ளியில் அனைவருக்கும்
புதியதோர் கதை சொன்னான்...

பண்டிகைகள் வந்தாலே
பாவிப் பய மக்க...
பலபேர் இப்படித்தான்
பணங்காசு இல்லாம
பிதுங்குது இருவிழியும்
பதுங்குது இல்லதுள்ளே...

பெத்ததுக்கு கூட
பொருள் சேர்க்க முடியல...
பெத்துக்காமலும்
இருக்க முடியல...

பசியிலும் பாலுணர்வு
பிறப்பது சுகமென்றாலும்?
பசியில் அழுவும்
குழந்தையைக் காண்கையில்
பெற்றோரையே வசைபாட
பலநேரம் வாய்துடிக்கும்...

இயற்கைக்கும்!
இறைவனுக்கும் கூட!!
படைப்பதில் பிழை
தவிர்க்க முடியாது போல!!!

Revolution....


இனி கரைவேட்டிகள்
கண்ணில் பட வாய்ப்பில்லை...
கதர் சட்டைக்கும்
கலர் துண்டுக்கும் வேலையில்லை...

சுழல் விளக்குகளும்
சூறாவளி பிரசாரமுமாய்
புழுதி பறக்கும் சாலையெங்கும்  
புயலென பாய்ந்த ஆட்களெல்லாம்...

பூப்படைந்த
பெண்ணைப் போலே
புகுந்து கொள்வார்
வீட்டுக்குள்ளே...

பெரியோராய், தாய்மாராய்,
பெருங்குடி மக்களாய்!!!
தென்பட்ட மக்கள் - இனி
பரதேசிபோல் புலப்படுவர்...

தேர்தலில் வெற்றி, ஆட்சியில் பங்கு;
அமைச்சர் பதவி, அளவில்லா சொத்து;
அடுத்த ஐந்தாடும்
அரங்கேறப்போவது இவைகள்தான்...

யாரேனும் ஒருவன் உண்டா?
ஓட்டு போட்ட மக்களுக்கு
உண்மையாய் உழைத்திட?
நன்மையை செய்திட?

ஓட்டு போட்ட அனைவருக்கும்
ஒன்று மட்டும் நிச்சியம் உண்டு...
ஜாதி மத வேறுபாடின்றி 
அனைவருக்கும் பெரிய நாமம்...

புரட்சி வெடிக்காமல் - இங்கு
பூபாளம் பிறக்காது...
புறமுதுகு காட்டிநின்றால் - நாளை
வரலாறு புகழாது...

ஒதுங்கியே இருந்தது போதும்...
இருந்த இடத்திலேயே
பதுங்குவோம் புலியைப்போல!
பாய்ந்திடுவோம் ஓர்நாள்!!
புதியதோர் உலகம் செய்ய!!!



Thursday 7 April 2011

தேர்தல்...


பச்சைத் தமிழனை
பிச்சைத் தமிழனாய்
கொச்சைப் படுத்திய
எச்சை கட்சிகள்...

மிச்சமுள்ள மனிதரையும்
விட்டுவைக்க மனமில்லாமல்
மூர்கத்தனமாய் தாக்குவதற்கே
மூள்கிறது - இங்கே தேர்தல் கனல்...

எத்தனை பேர் போயிருப்பார்கள்
தனது சொந்த தொகுதிக்கு?
என்னவெல்லாம் செய்திட்டார்கள்?
தன்னை நம்பிய பகுதிக்கு...

மனசாட்சியை இப்படி
மார்வாடியிடம் வைத்துவிட்டு;
மறந்துபோன தொகுதிகளை - இன்று
பறந்து வந்து பார்க்கிறார்கள்...

ஏருழுத மண்ணெல்லாம் - இன்று
ஏழடுக்கு மாளிகையாம்...
உழைத்தவன் பசித்திருக்க - இங்கே
ஊழலுக்கு விருதுகளாம்...

மறதியும் மறுவாழ்வும்
மறத்தமிழனின் மறுக்கமுடியா
தேவை என்றுணர்ந்து - இன்று
மிக்சியாம், கிரைண்டராம்!!!

கையூட்டு வாங்கிக்கொண்டால்
கரைபடியும் நம் கைகள்...
கரைவேட்டிக் காரர்களுக்கு
இதைவிட்டால் வழியில்லை...

நம்மையும் அவர்கள் செய்யும்
ஊழலில் சேர்த்துக்கொள்ள;
நயந்து சொல்வதுதான் - இந்த
நயவஞ்சக தேர்தல் அறிக்கை!!!

எலும்புத்துண்டை கொடுத்துவிட்டு
இரும்பைக்கொண்டு நாளை அடிப்பர்...
இருப்பதை காத்துக்கொள்ள
இனியாவது முயற்சி செய்வோம்!!!

விழிப்புடன் வாக்களிப்போம் - மக்களுக்கு
வழித்தடம் காட்டிடுவோம்!!!
வாக்களிப்போம்!!!
வாழ்வை மீட்ப்போம்!!!