Saturday 4 August 2012

...தரிசு நிலம்...

ஏழு வருசமாச்சே;
இந்த வெறுஞ்சிறுக்கி
வயித்துல - ஒரு
புழு பூச்சி உண்டாச்சா?

தன் வயதொத்த
தோழியிடம்
அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்;
தங்கையனின் தாய்
அங்கம்மாள்...

ஆம்...
தங்கையனுக்கு
திருமணமாகி;
புரட்டாசி வந்தால்
வருடம் எட்டு!

புத்திர சோகத்தில்
நித்திரையின்றி
நித்தம் தவித்த 
தங்கையன் ரெத்தினம் 
தம்பதியினர்;

சுற்றாத மரமோ
செல்லாத கோயிலோ
வேண்டாத கடவுளோ
இல்லையென்றே
சொல்லவேண்டும்!

குறுவைக்குக்
காத்திருக்கும்
கழனியைப்போல;
குறுக்கும்
நெடுக்குமாய் வெடித்த
வயல்வேளியாகவே
வாழ்க்கையும் ஆனது...

வானம் பார்த்த
பூமிக்கு சொந்தக்காரன்;
வக்கற்றிருப்பது
வழக்கம் தானே?

குழந்தையுமில்லை
குறுவையு மில்லாததால்
இவ்வருடம்
மகிழ்ச்சியுமில்லை
மகசூலுமில்லை - அந்த
மாட்டுக்காரப் பயலுக்கு...

பாலைக்கொண்டு
பிழைப்பு நடத்திய
பாவப்பட்டவனைக் கண்டு
மாரியாத்தாள்
மனமிறங்கினாள் போலும்!

எலிவெட்டுக்காக
எடக்குமுடக்காக
துண்டாடப்பட்டிருக்கும்
வரப்பையும் - தன்
வாழ்க்கையையும்;
ஒப்பிட்டுப் பார்த்தபடியே
ஓலைக்குடிசை நோக்கி
ஓங்கி நடந்தான்...

வாசலில்
வெற்றிலை
குதப்பிக்கொண்டிருந்த
அங்கம்மாளைப் பார்த்ததும்
வந்தவேகம் பாதியாய்
குறைந்தது...

பாவம்;
குடிசையில்
காத்திருக்கும் செய்தியை - அந்தக் 
காட்டுப்பயல் அறிந்திருக்கவில்லை...
(தழைக்கும்...)