Friday 29 June 2012

முற்றத்து தாவரங்கள்...

நேற்று வரை
என் வரவிற்காக - அவை
காத்திருந்ததாகவும்;
அவ்வபோது
தலையசைத்து
என்னுடன் பேசுவதாகவும்
எண்ணிக்கொள்வேன்...

இன்புற்றிருக்கும்
மனிதனைப் பார்த்தால்
எப்படித்தொன்றுமோ
இயற்கைக்கு?

முந்தாநாள்
மாலைப் பொழுதில்
முற்றத்தை நிரப்பிய மழை - சற்று
மகிழ்ச்சியை தந்தாலும்!

எங்களுக்குள் ஏற்பட்ட
இடைவெளியையும் - அதை
ஏற்படுத்திய இம்மழையையும்
வெறுக்கவே செய்கிறேன்?

இப்போது
நன்கு புரிகிறது!
மகனுக்குத் திருமணம் முடித்த
ஓர் தாயின் வேதனை...

Thursday 28 June 2012


மானுடம் என்பது...


ஆளில்லா வழித்தடத்தில்
அன்புக்குரியவளைக்
கட்டியணைக்க
காட்டும் அவசரம்...

காமசூத்திரக் 
கலையனைத்தும் 
கட்டியவளிடம் காட்டத்
துடிக்கும் ஆர்வம்...

ஈன்ற குழந்தையின் 
எச்சில் சோற்றை
உச்சுக்கொட்டி சுவைக்க 
ஏங்கும் ஆவல்...

போட்டியாளனைப்
பின்னுக்குத்தள்ளி
வெற்றி பெற்றிட
உந்தும் வெறி...

பொறுப்புகளை முடித்து
விரைவாய் இளைப்பாற
இயற்றும் வரைவு - அதனோடு
இயங்கும் செயல்... 

இவற்றோடு
நின்றுவிடுவதில்லை
இப்பிறப்பின் நோக்கம்!

கண்முன்னே நிகழும்
கொடுமைகள் கண்டு
குரலெழுப்பாத நீயும்;
கள்வர்களைக் கண்டு
குரைக்காத நாயும் ஒன்றே!!

பிறகு
உனக்கெதற்கு 
ஆறறிவு;
ஆராய்ந்து பார்த்து
அழிவைத்தரவா?

Wednesday 27 June 2012

 
விளம்பரதாரர்களுக்கு
விற்கப்படும் வாசகர்கள்


---

கட்டுமரக்காரனின்
மரணத்தை விட;
கள்ளக்காதல் விவகாரத்திற்கு
முக்கியத்துவம் தரும்
ஊடகங்களை!

வறுமையின்
பிடியில் சிக்கி;
வேறு வழியின்றி
பாலியல்தொழில் செய்யும் - ஓர்
பெண்ணின் புனிதத்தோடு
ஒப்பிடுதல் முட்டாள்தனம்!!

இவள் விற்பது
தன்னை...
அவன் விற்பது
உன்னை...

கார்பரேட் நிறுவனங்களுக்கு - உன்
பெருமூளை விற்கப்படுவது
உனக்குத்தான்
புரிவதேயில்லை!!!