...கண்ணை விற்று ஓவியம் வாங்கு...
அப்பளம்
விற்பதற்கு கூட
அமெரிக்க புகழ் தேவைப்படும்
காலக்கொடுமை...
"உலகத்தரம்" என்ற
ஒற்றை வாக்கியமே - இன்றைய
உற்பத்தியாளரின்
தாரக மந்திரம்...
ஐ.எஸ்.ஒ சான்றிதழ்கள்
அத்தனையும் - இன்று
அண்ணாச்சி கடைகளில்
கிடைத்திடும் வேளையில்;
எது உலகத்தரம்?
யார் அதனை
வழங்குவது?
குக்கர் முதல்
நிக்கர் வரை!
கட்டுமான கம்பி முதல்
காண்டம் பாகெட் வரை!!
அனைத்தும் இங்கே
உலகத்தரம் - ஆனால்
உண்மைநிலையோ
வேறு கதை...
உலகத்தரத்தை நாடும்
உள்ளூர் தோழர்கள்;
"பிராண்டட்" மோகத்தின்
பிரதிபலனாய் பெற்றது
ஏதுமில்லை!
ஆனால்...
புறக்கணித்ததின்
பலனாய் புதையுண்டு போன
நிறுவனங்கள் ஏராளம்!!
உள்ளூர் உற்பத்தியை
ஒழித்திவிட்டு!
விலையுயர்ந்த ஆடைகளை
வாங்கியணிந்தால்
வல்லரசாகலாம் என்று - எந்த
வெள்ளைக்காரன் சொன்னானோ?
விளங்காதவர்களுக்கு!
காதியில் கிடைக்கும்
கதர்சட்டையை - நம்மில்
எத்தனை பேர்
வாங்குகிறோம்?
ஆனால்...
ஆலன்சோலியும்
ஆக்ஸம்பெர்கும் - நிச்சயம்
அனைவரிடமும் இருக்கும்
கண்ணை விற்று
ஓவியம் வாங்கியபின் - நாம்
காணப்போவது எதை?
- பத்மா சுவாமிநாதன்
No comments:
Post a Comment