Monday, 30 July 2012

...தெரியாது எங்களுக்கு...

இதைப்போலவே ஓர்
இனிய காலைப்பொழுது...

அன்றும் வழக்கம்போல்
இயந்திரமாய்
இயங்கிக்கொண்டிருந்தாள்...

எந்த ஜென்ம பாவத்தையோ
எங்களிடம் தெத்துவதற்கு
அடுப்படி அலுவலில்
அமர்ந்திருந்தவளிடம் கேட்டேன்...

"அம்மா இன்னைக்காவது"
தோச சுட்டுத் தருவியான்னு!
சாணியள்ளி கொட்டிடுறேன்...
நெல்ல காயவச்சி;
மழுங்க அரைச்சி குடுக்குறேன்...
வெள்ளாட போமாட்டம்மா...

அவள்
சுட்டு அடுக்கும் தோசைக்காக
நான் சுடச்சுட அடுக்கிய
வாக்குறுதிகளை
கேட்டுவிட்டு;

தன் கண்ணிரண்டும் ஊற்றெடுக்க
முந்தானையால் துடைத்தவள்
என் தலைவருடிச் சொன்னாள்...

அப்பா அனுப்புன பணம்
நாளைக்கி வந்துடும் ஆயி...
இன்னைக்கி மட்டும்
பழையது சாப்புடு!
என் செல்ல புள்ளயில்ல!
என் தங்க புள்ளயில்ல!
என் அப்பால்ல!
என்று...

அப்பா பணமனுப்ப
ஆறு மாதங்களாயின...
அரைவயிறும்
கால்வயிறும்
பிள்ளைகளுக்கும் நிறைந்தது...
அவளுக்கு மட்டுமே
"அல்சர்" வந்தது...

அதுவரை
தெரியவேயில்லை
அம்மா சாப்பிடும் நேரம்!
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment