Friday 24 December 2010

ஆயா...

நினைவு தெரிந்த பொது
நீயே அருகில் நின்றாய்...
பசியில் அழுத பொது
பிசைந்து அன்னம் தந்தாய்...
அம்மணமாய் அலையும்போது
அள்ளி முத்தமிட்டாய்...
கண் கலங்கி நின்றபோது
கன்னம் துடைத்திட்டாய்...
கண்ணயர்ந்து சாய்ந்தபோது
கனத்த மடி தந்தாய்...
கண்மூடி தூங்கும் போது
கட்டி அனைத்திட்டாய்...
அடம்பிடித்து கேட்டபோது
அழகாய் விளக்கம் சொன்னாய்...
குளிக்க நான் போனால்
கூடவந்து முதுகு தேய்த்தாய்...
பள்ளிக்கூடம் போகும்போது
பாதை முற்றும் பார்த்திருப்பாய்...
கலைத்து வரும்போது
கதைகள் நூறு சொல்லிடுவாய்...
அரை டவுசர் அணிந்த நானும்
ஆண்மகனாய் ஆகிவிட்டேன்...
ஆசையாய் வளர்த்த நீயோ!
ஆகாசம் சென்றிட்டாயோ?
படல் போட்டு வேளி மூட;
பலமுறை சொன்னவளே?
பாவி உன்னை விட்டு செல்வேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!
பயிர்பிடித்து நாற்றடிக்கப்; 
பாங்காக சொன்னவளே?
பாதியிலே போய்விடுவேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!
ஐந்து பிள்ளை பெற்று
அனைத்திற்கும் உணவு தர...
பட்டினியாய் இருந்தபோதும்
நடவு நடப் போனவளே?
அவரவர் குடும்பத்தோடு
மகிழ்ச்சியாய் இருக்கையிலே...
அனைத்திற்கும் வித்திட்ட
அஞ்சலை உன்னைக் காணோமே?
கொள்ளு பேரன் வந்தபோதும்
எந்தன் பேரன் நீதான்னு
கூசாமல் சொன்னவளே!
குழியில் உன்னை வைத்தபோது...
குரல்வெடிக்க அழுத என்னை
கண்திறந்து பாக்கலையே?
பீத்துணி கசக்கி போட்ட
பெற்றவளே உன்னை எண்ணி...
பேரன் நான் அழுகிறேனே?
பேசாம கொள்ளாம இருக்குறியே - உனக்கு
பாசமது போயிடிச்சா?
பாவி மனம் காஞ்சிடிச்சா?
ஏகவசனம் பலசொல்லி ஏகத்துக்கும் திட்டுவியே?
ஏதாவது ஒன்றை சொல்லி இப்ப என்னை திட்டேன்?
கோவத்துல நீ அடிச்ச;
காயத்துக்கு மருந்து போட்டு...
கால்மாட்டுல அழுதவளே?
பாவமாவே இல்லையாடி என்னபாத்தா?
பாதகத்தி உனக்கு யார்மேல என்ன கோவம்?
ஆயிரந்தான் இருந்தாலும்...
ஆயா நீயிருந்தா?
ஆலயமே போகமாட்டேன் - எனக்கு
அத்தனையும் நீதான...

No comments:

Post a Comment