Thursday 2 December 2010

சனிக்கிழமை சாயங்காலம்...

அழகிய மாலைப்பொழுது - அன்று
அனைவருமே குதூகலிக்க...
சுட்டெரித்த வெயிலும் - சற்று
சாந்தமாய் சாயும் வேளை...

இறக்கை படபடக்க இருட்டும் முன்னரே - தன்
இருப்பிடம் தேடி பறந்தன பட்சிகள்...
பறவைகள்  மட்டுமா - பாழாய்ப்போன
மனிதனும் சாலையில் பறக்க...

சிறப்பு வகுப்புகள் முடித்து சிறகடித்து சென்றது 
சிறுவர்கள் கூட்டம்...
சாயங்கால பூஜைக்கு காந்திருந்தார் - நம்
சாலையோர பிள்ளையார்...

கல்லூரி பேருந்து கண்முன் நிற்க - தன் 
காதிலியைத்தேடும் காளையர் கூட்டம்...
கைபேசியில் மனைவி அழைக்க;
கையை பிசையும் கணவன்மார்கள்...

சமத்தாய் குடும்பத்தோடு கோவிலுக்கு ஒரு கூட்டம்!
சமுதாய சிந்தனையோடு குடிக்க ஒரு கூட்டம்!
இப்படி அனைவரும் ஆளாய்ப்பறக்க...

வயதான தம்பதி ஒன்று
வழியில் தென்பட்டது...
பார்த்த கணமே புரிந்தது  - அது
பாதி நூற்றாண்டு காதலென்று...

காதலுக்கு அர்த்தம் சொல்லி - மெல்ல
காலடிபோட்டது அந்த ஜோடி...
இவரோன்று சொல்ல - புன்னகைத்து 
அவரொன்று சொல்ல...
இருவருமே நடந்தனர் சற்று
பொறுமையாகவே.....

காதலென்பது வேதியியல் மாற்றமல்ல - உயிர்
வாழும் இயலாற்றல் - எனப்  
புரியவைத்தது அந்த தளர்ந்த நடை...

இதுவே காதல்...
இதுதான் காதல்...
என்றென் காதில் ஒலிக்க...
சுவாரசியமாய் போனது - அந்த
சனிக்கிழமை சாயங்காலம்...

No comments:

Post a Comment