Wednesday, 29 December 2010

அண்ணன் அழைக்கிறார்... அலைகடலென திரள்வீர்...

முகநூல் நண்பர்களே...
முகம் தெரியா தோழர்களே...
நட்பை ஏற்றுக்கொண்ட நல்லோர்களே...
அழைப்பு தந்த அன்பர்களே...
விருப்பங்கள் தந்த வள்ளல்களே...
கருத்து கொடுத்த கனவான்களே...
கலாய்த்த கண்மணிகளே...
பெரியோர்களே...
தாய்மார்களே...
அண்ணன்மார்களே...
அக்காமார்களே...
தாத்தாமார்களே...
பாட்டிமார்களே...
உங்கள் அனைவருக்கும் ஒரு நற்ச்செய்தி...
ஆன்மீக பனி நிமித்தமாக
அடியேன் புறப்பட இருக்கிறேன்...
மீண்டும் உங்களை சந்திக்கும் வரையில்...
மீளமுடியா துயர்கொன்டாலும்...
மலையாளக் கரை போய் வந்தாலும்...
மூன்றாம் தேதி நான் வருவேன்...
முகநூல் துணைகொண்டு கிறுக்கிடுவேன்...
தொல்லை ஒழிந்தது என்றுங்கள்
உள்ளம் சொல்வது...
தொலைதூரத்தில் இருந்தாலும்
உறக்க கேட்குது...
"அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ...
எல்லாம் வல்ல இயற்கையை / இறைவனை
வேண்டுகிறேன்..."
இத்துடன் என் உறையை முடித்துக்கொண்டு...
வாய்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி...
ஏ யாருப்பா பின்னாடி தள்ளுறது?
பேசிக்கிட்டு இருக்கோம்ல?
ஏ வேட்டிய எவன்டா உருவுறது?
ஏ இந்தாடா வேட்டிய உடுறா?

Tuesday, 28 December 2010

காதல் கானா...

கண்ண தொறந்து பாக்கசொல; 
காலையில பத்துமணி...
காதாண்ட கத்திகினேகீரா;
ஏன் ஊட்டுக்காரி...

இன்னாத்துக்கு கூவுறன்னு
உட்டேன் ஒன்னு லெப்ட்டுல...
ங்கொம்மால உருள கெயங்கு மாறி
வீங்கிகிச்சி கயித்துல...

வழிச்சி வழிச்சி ஊத்துனா பாரு;
வாய் கீயிர வரைக்கும்...
அவ சொன்னதெல்லாம் கேட்டீங்கோ?
ஒங்க காது நொறைக்கும்...

மொறச்சி மொறச்சி பாத்துகினே
வீட்டுக்குள்ள வந்தா...
மொனவிகிட்டே வேலையெல்லாம்
ஈத்து போட்டு செஞ்சா...

பண்ணுனது தப்புன்னு;
அப்பாலதான் புரிஞ்சிது...
பொண்டாடிக்கு பூ வாங்க
மன்சு ரொம்ப துடிச்சுது...

மல்லிய பூவும் அல்வாவும் - என்
மல்கோவாவுக்கு வாங்கிக்கினு...
மாலை நேரத்துல
மன்மத ராகம் பாடிகினு...

வேலை முடிஞ்சதும்
வீட்டுக்கு போயி பாத்தா?
விட்டத்துல தொங்கிபுட்டா 
வீட்டுக்காரி சீதா...

ஒன்னியும் இல்லாத பிரச்சனைக்கா
உசுர உட்ட பாவி?
ங்கோத்தா உன்ன தேடி வரும் பாரு
என்னோட ஆவி...

பொண்டாட்டிய அடிக்காத...
சந்தேகத்துல துடிக்காத...
பின்னால போயி பாக்காத...
பேச்ச ஓட்டு கேக்காத...
முழுசா அவள நம்பு...
முடியலன்னா?
என்ன மாறி தொங்கு...
 

Friday, 24 December 2010

ஆயா...

நினைவு தெரிந்த பொது
நீயே அருகில் நின்றாய்...
பசியில் அழுத பொது
பிசைந்து அன்னம் தந்தாய்...
அம்மணமாய் அலையும்போது
அள்ளி முத்தமிட்டாய்...
கண் கலங்கி நின்றபோது
கன்னம் துடைத்திட்டாய்...
கண்ணயர்ந்து சாய்ந்தபோது
கனத்த மடி தந்தாய்...
கண்மூடி தூங்கும் போது
கட்டி அனைத்திட்டாய்...
அடம்பிடித்து கேட்டபோது
அழகாய் விளக்கம் சொன்னாய்...
குளிக்க நான் போனால்
கூடவந்து முதுகு தேய்த்தாய்...
பள்ளிக்கூடம் போகும்போது
பாதை முற்றும் பார்த்திருப்பாய்...
கலைத்து வரும்போது
கதைகள் நூறு சொல்லிடுவாய்...
அரை டவுசர் அணிந்த நானும்
ஆண்மகனாய் ஆகிவிட்டேன்...
ஆசையாய் வளர்த்த நீயோ!
ஆகாசம் சென்றிட்டாயோ?
படல் போட்டு வேளி மூட;
பலமுறை சொன்னவளே?
பாவி உன்னை விட்டு செல்வேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!
பயிர்பிடித்து நாற்றடிக்கப்; 
பாங்காக சொன்னவளே?
பாதியிலே போய்விடுவேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!
ஐந்து பிள்ளை பெற்று
அனைத்திற்கும் உணவு தர...
பட்டினியாய் இருந்தபோதும்
நடவு நடப் போனவளே?
அவரவர் குடும்பத்தோடு
மகிழ்ச்சியாய் இருக்கையிலே...
அனைத்திற்கும் வித்திட்ட
அஞ்சலை உன்னைக் காணோமே?
கொள்ளு பேரன் வந்தபோதும்
எந்தன் பேரன் நீதான்னு
கூசாமல் சொன்னவளே!
குழியில் உன்னை வைத்தபோது...
குரல்வெடிக்க அழுத என்னை
கண்திறந்து பாக்கலையே?
பீத்துணி கசக்கி போட்ட
பெற்றவளே உன்னை எண்ணி...
பேரன் நான் அழுகிறேனே?
பேசாம கொள்ளாம இருக்குறியே - உனக்கு
பாசமது போயிடிச்சா?
பாவி மனம் காஞ்சிடிச்சா?
ஏகவசனம் பலசொல்லி ஏகத்துக்கும் திட்டுவியே?
ஏதாவது ஒன்றை சொல்லி இப்ப என்னை திட்டேன்?
கோவத்துல நீ அடிச்ச;
காயத்துக்கு மருந்து போட்டு...
கால்மாட்டுல அழுதவளே?
பாவமாவே இல்லையாடி என்னபாத்தா?
பாதகத்தி உனக்கு யார்மேல என்ன கோவம்?
ஆயிரந்தான் இருந்தாலும்...
ஆயா நீயிருந்தா?
ஆலயமே போகமாட்டேன் - எனக்கு
அத்தனையும் நீதான...

தமிழ்த் துரோகி...

வழக்கம் போல
ஊழல் செய்தியும்
புலனாய்வு படையெடுப்பும்
அமலாக்க பிரிவின் ஆய்வும் - அலுப்போடு
படித்துக்கொண்டிருந்த என்னை;
அதிரவைத்தது சென்ற வார
ரிபோர்ட்டர் இதழ்...
அந்த வலியின் குமுறல் இதோ...
தமிழ்நாட்டில்
எத்தனையோ மக்கள் விரோத செயல்களை
மாறி மாறி செய்த நம் மாநில அரசுகள்?
நீண்டகாலமாய் நம் மொழிக்கு
செய்திட்ட துரோகம்தான் அது...
தன்னை தமிழுக்கும் தமிழனக்கும் அற்பணித்ததாய்
சொல்லிக்கொள்ளும் தமிழின தலைவர்
கலைஞர் ஆட்சியிலும் இதற்கொரு தீர்வு
காணப்படவில்லை என்பதே என் வாதம்..
ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற
பிற பாடங்களுக்கு அவ்வபோது
ஆசிரியர்களை பணியமர்த்துகிற இவர்கள்...
"1989ம் ஆண்டு முதல் இன்றுவரை
தமிழ் பாடத்திற்கு மட்டும்
ஆசிரியர்களை பணியமர்த்தவே இல்லை"
சுமார் 6700 ஆசிரியர்கள் தேவை என
அரசுக்கு பரிந்துரை செய்தபோதும்!!!
இருபத்தைந்தாயிரம் தமிழ் படித்த ஆசிரியர்கள் 
தமிழகத்தில் இருக்கும்போதும்!!!
இதுவரை மூன்று பேர்
தற்கொலை செய்துள்ள நிலையிலும்!!!
கல்வித்துறையும், கழக ஆட்சியையும்
கண்டுகொள்ளாதது ஏன்?
மாயவரம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் 
பதினொன்றாம், பன்னிரெண்டாம்;
வகுப்பு படிக்கையிலே எங்கள் தமிழாசிரியர்
வாரம் ஒருமுறைதான் வகுப்பறைக்கே வருவார்...
பிறகெப்படி தமிழ் வளரும்?
சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால்;
தமிழ் வளருமா?
சிறார்களுக்கு சொல்லித்தந்தால் வளருமா?
முன்னூறு கோடி செலவு செய்து;
முட்டு சந்தெல்லாம் போஸ்டர் வைத்து;
முட்டை பிரியாணி போட்டால் வளருமா?
மொழியின் சிறப்பறிந்த பாவலர் பெருமக்கள்;
பாடம் நடத்தினால் வளருமா?
மொழிக்காக எதுவுமே  செய்யாமல்...
தமிழ்...
தமிழன்...
தமிழினம்...
தமிழ்நாடு...
தமிழ்த்திமிர்...
என தமிழனை முட்டாளாக்கும்
தமிழினத்தலைவருக்கு...
தமிழ்த் துரோகி எனும் பட்டமளித்து
ஒரு விழாவும் நடத்தலாமென நினைக்கிறேன்...
"தமிழ் இனி மெல்ல சாகும்" என
அந்த முன்டாசுப்புலவன் சொன்னது...
இதையெல்லாம் எண்ணித்தானோ?

Thursday, 23 December 2010

பிதற்றல்...

கதையே இல்லாத படம்...
காரணமே இல்லாத சண்டை...
கொள்கையே இல்லாத கட்சி...
நன்மையே செய்யாத அரசு...
ஒழுங்கே இல்லாத சட்டம்...
ஒழுக்கமே இல்லாத சாமியார்...
மின்சாரமில்லாத கிராமம்...
மீன்பிடிக்க முடியாத மீனவன்...
ஜனநாயகம் இல்லாத தேர்தல்...
ஜன கன மன தெரியாத மந்திரி...
கூரையே இல்லாத குடிசை...
குடிக்க கஞ்சில்லாத மக்கள்...
வேகம் குறையாத விலைவாசி...
வெங்காயமில்லாத சாம்பார்...
தொட்டுகொள்ளாத காதல்...
தோனியில்லாத கிரிகெட்...
கிசு கிசு இல்லாத சச்சின்...
கீ இல்லாத கார்...
கணவில்லாத தூக்கம்...
காயமில்லாத விபத்து...
புடவை அணியாத பெண்கள்...
போனால் வராத வாய்ப்பு...
தலைவனில்லாத இயக்கம்...
தரம் தெரியாத இணம்...
உண்மையில்லாத வழக்கு...
ஊறுகாய் இல்லாத விருந்து...
இவையெல்லாம் இருக்கும்போது
தலைப்பில்லாமல் எழுதினால் என்ன?
என்றொரு யோசனை இன்றெனக்கு...
அதன் பலனாகவே - இந்த பிதற்றல்...
இடையிடையே இப்படி ஒரு
இடுக்கையும் நானிடுவேன்...
இவனும் ஒரு கவியென நம்பி
இவற்றையெல்லாம் வாசித்த
உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...
பிதற்றல்கள் தொடரும்...
பின்தொடர ஆளிருந்தால்?

Wednesday, 22 December 2010

ஞானோதயம்...

அதிகாலை...
அந்தி மாலை...
குளிர் காலம்...
கோடை காலம்...
இவையேது எனக்கு...
திங்களும்..
புதனும்...
திருவாதிரையும்...
பிரதோஷமும்...
தெரியாது எனக்கு...
புத்தகம்...
பள்ளிக்கூடம்...
பரிட்சை...
பாடம்...
பிடிக்காது எனக்கு...
அலுவலகம்...
அண்டைவீடு...
ஆலயம்...
ஆன்மீகம்...
அறவே ஆகாது...
அவள் குரல் கேட்டுக்கொள்ள;
அலைப்பேசி ஒன்றே போதும்.
தொடக்கம்தான் தடுமாற்றம்;
தொடங்கிவிட்டால் போதும்...
தொலைதூரம் நடந்தே செல்வேன் - அவளின்
தோடி ராகம் கேட்டுக்கொண்டு...
அலுவல்கள் மறந்து;
அவைதரும் பலன் மறந்து...
அவளே வாழ்வென்று வாழும் எனக்கு?
அப்பா சொன்னது மறந்தே போனது...
"எப்படி வேணும்னாலும் வாழலாம்
என்பது வாழ்க்கையல்ல...
இப்படித்தான் வாழவேண்டும் என
வழி அமைத்து...
திட்டம் வகுத்து...
முறையாக உழைத்து...
உன் கடமையை செய்யவேண்டும்" - என்று.
இனிமேலாவது அவர் சொன்னதை
செய்யணும்...

Tuesday, 21 December 2010

பசி வந்தால்?


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...
இந்த பழமொழி அனைவரும் அறிந்ததே...
அவையோரும் உணர்ந்ததே...
ஆனால்...
"பசி வந்தால் புலன்கள் புலப்படும்"
என உறக்கச் சொன்னது;
என் வாழ்வில் நடந்த சம்பவம்...
சம்பவமென்றால் அது சரியாகாது...
நாடகமென்றே சொல்லவேண்டும்...
வேலையை விட்ட நானும் என் நண்பனும்...
பசியின் காரணமாய் நடத்தியது...
வருடம்: ஈராயித்து நான்கு
இடம்: ஆண்டவர் நகர், கோடம்பாக்கம்.
நடிகன்: நான்
இயக்கம்: என் நண்பன்
தயாரிப்பு / முதலீட்டாளர்:
சஸ்பென்ஸ் (பிறகு சொல்கிறேன்)
காலையில் இருந்து சாப்பிடல...
கடன் வாங்கவும் யாருமில்ல...
கனகராஜ் வச்சிருந்த டீக்கடை பக்கம்போனா?
தீப்பொறி பறக்க பார்கிறார் அவர்...
என்ன செய்வார் பாவம்!
போட்ட முதலெல்லாம் - நாங்கள்
போட்டுவிட்டோம் வயித்துக்குள்ளே...
என்னதான் செய்யலாம்?
பலத்த யோசனை...
குழம்பி அடங்கிய குளம்போல!
தெளிவாய் யோசனை ஒன்றை இயக்குனர் சொல்ல...
புறப்பட்டோம் புதுக்கடைக்கு...
ஆம் அன்றுதான்
ஒரு உணவகம் திறந்திருந்தார்கள்...
சீவி முடிச்சு சிங்காரிச்சு;
ஒய்யாரமாய் நிற்கும் புதுப்பெண் போல...
சீரியல் லைட்டெல்லாம் போட்டு
ஜொலித்தது உணவகம்...
No Clap...
No Lights...
No Camera...
No Prompting...
Only Director & Artist...
கைலி டி.ஷர்ட் தான் காஸ்டியும்...
இயக்குனர் செய்கை காட்ட;
சற்று பயத்துடனே ஆரம்பித்தேன்
என் நடிப்பை...
பரபரப்பாய் இயங்கிய ஹோட்டலுக்குள்
பயங்கரமாய் உள்ளே நுழைந்த நாங்கள்;
பசியாறினோம் - பையில் பணமில்லாமலேயே!!!
கைகழவுப் போகுமுன்னே இயக்குனர் கண்ணசைக்க...
தட்டிவிட்டேன் - அருகிலிருந்த
ஹாப் பாயில் தட்டுகளை...
என்னாடா ஹோட்டல் இது...
இப்ப நான் என்ன பண்றேன் பாரு என்றேன்...
தழுதழுத்த பேச்சோடு...
என்ன பண்றது குடிச்சவன் அப்படிதான நடிக்கணும்...
உரிமையாளர் ஓடிவந்தார் பயத்தோடு...
சிரிப்பை அடக்கிக்கொண்டு
சீறிப் பாய்ந்தேன்...
நான் யார் தெரியுமா?
அதிர்ந்து போனவரிடம் இயக்குனர் விளக்கி சொன்னார்...
பையன் நெறையா குடிச்சிருக்காப்ல...
பிரச்னை பண்ணுவான் இப்படிதான் என்று...
நாங்கள் ரௌடிகள் என்று நினைத்த அவர்...
பரவாயில்லை தயவுசெய்து
கூட்டிட்டு போங்க பணமே வேண்டாமென்றார்...
தள்ளாடிய படியே வெளியேறினேன்
டேரக்டர் துணையோடு...
நம்பவே முடியவில்லை நானா நடித்தேனென்று...
சிறந்த திரைக்கதை...
நன்றிகளை இன்றும் சொல்வோம் - எங்கள்
பசியாற்றிய பாரிக்கு...
அப்போதுதான் புரிந்தது
அனைவருக்குள்ளும் ஒரு கலைஞன் உண்டென்று...
இப்போது புரிகிறதா பசி வந்தால்
புலன்கள் புலப்படும்...
எங்கள் நாடகத்துக்கு
முதலீட்டாளர் ஐயப்பன் உணவகம்...
ரெண்டு மூணு நாள்ள
சாப்பிட்ட காச குடுத்துட்டோம் - அந்த
அன்னதானப் பிரபுவிடம்...

Monday, 20 December 2010

படைத்தவனை தூக்கிலிடு...


பருக்கள் முளைத்தபோதே;
பாவி நெஞ்சுக்குள்ளே...
காமமும் முளைத்துவிட...
தன் இச்சை முழுதாய் தீர்க்கும்
தணவானை தேடியவள்
தனக்கென ஒருவனை தயங்கி தேர்வுசெய்ய...
பார்வையிலே பேசிய காதல்
போர்வைக்குள்ளே போய் முடிய...
உப்பு நீர் வார்த்த தேகம்
சப்பு கொட்டி சுவைக்கத்தோன்ற...
நரம்பெல்லாம் சூடாகி - நேரம் காலம்
இவைமறந்து தேகப்பசி கண்மறைக்க...
காமுகன் உமிழ்ந்த எச்சில் - அவள்
கற்பு கறைபடிய...
தன் காம வெறிதீர்த்த;
காதலனை முத்தமிட...
தொட்டவுடன் சிலிர்த்த தேகம்
கெட்டபின்பு கசகசக்க...
காமமும் ஓய்ந்தது - அவளின்
காதலும் தேய்ந்தது...
புணர்ச்சியின் பலனாய் - பிறந்த
பாலகனை ஏன் அவள் கொன்றாள்?
பெண்ணவளை பூமி என்றோம்...
கடவுளென்றோம்...
அவளுக்கும் பசி உண்டு...
ருசி உண்டு...
காதல் உண்டு...
காமம் உண்டு...
பிறகெப்படி கடவுளாவாள்?
ஆணுக்குள்ள சுதந்திரங்கள்...
பெண்ணுக்கும் வேண்டுமென்று;
தோள்தட்டி நிற்கும் உலகே!!!
ஆற்றிலும் மேட்டிலும்...
தொப்புள்கொடி உறவுதனை;
பெற்றவளே கொல்வதுதான் சுதந்திரமா?
முறைதவறி பிறந்ததேன்றால்?
அது முந்திவிரித்துப் படுத்தவள் குற்றமா?
அல்ல கழுத்தை நேரிக்கும்போதும் அம்மாவென்றழுத
குழந்தையின் குற்றமா?
முட்டையாய் இருந்த சிசுவை...
முழங்கால் தேயத்தேய
மூக்கும் முழியுமாய் ஆக்கியவன் குற்றமென்றால்?
பிறப்புறுப்பை உள்ளே வைத்து
கருத்தரிப்பை நடத்தும்போது
கண்சொருக கிடந்ததவளே...
உன் பெயர்தான் பத்தினியோ?
உடற்பசிக்கு தீனிபோட்டால்?
உள்ளே ஒன்று வளருமென்று;
உணகன்றே தெரிந்தபோதும்!!!
உறை ஒன்றை போட்டுக்கொண்டால்?
சுகமொன்று குறையுமென்று;
ஆணுறை தவிர்த்த பெண்ணே...
நீயும் ஒரு பிறப்பா?
உனக்கு தாய்மையை கொடுத்ததற்கு;
படைத்தவனை தூக்கிலிட வேண்டுகிறேன்...

Friday, 17 December 2010

சிதம்பர இரகசியம்...

மூடிய கைகளுக்குள்
மிட்டாய் தேடும் குழந்தைபோல...
இரகசியம் என்றாலே
தெரிந்து கொள்ள துடிப்பது
மனித இயல்பு...
அதுவும் அந்தரங்கமென்றால்
அளவற்ற ஆர்வம் - நமக்கு...
தினமலரின் அன்புடன் அந்தரங்கம் தொடங்கி...
மருத்துவர் மாத்ருபூதத்தின் புதிரா புனிதமா வழியில்...
தமிழகத்தின் அணைத்து தொலைகாட்சியிலும்
இன்று பல வெற்றிகரமான நிகழ்சிகள்
நம் தேடலுக்கு உதாரணங்கள்...
மனித அந்தரங்கத்தை கறைத்து குடித்து
அலுப்பு தட்டிய நம் மக்களுக்கு...
இது சற்று சுவாரசியம் தான் - ஏனென்றால்
இது கடவுளின் இரகசியம்...
ஆம்...
சித்தன் பித்தன் எனப்பாடப்பட்ட;
சிவனுக்கே தெரியாமல் இயற்றப்பட்ட;
சிதம்பர ரகசியம்...
ஆண்டவன் இரகசியத்திற்கு
ஆளுக்கொரு விளக்கம் அளித்தாலும்...
ஆணவம், கர்வம், மாயை நீக்கி
அவனை வேண்டி காணும்போது;
சிவபெருமானும் பார்வதி அம்மையாரும்
தங்க வில்வ இலைகளாய் தோன்றி;
தரிசனம் தருவார்கள் என்று விளக்கமளிக்கிறது
அந்தணர் தரப்பு...
உண்மை கதை என்னவென்றால்?
"வழி மறைத்திருக்குதே - மலைபோல்
ஒரு மாடு படுத்திருக்குதே...
பாவிப் பறையன் இந்த ஊரில் வந்தும்
பாவம் தீரேனோ..." என்று பாடி
நந்தி வழிவிட்டு நாதன் அருள்பெற்ற;
63 நாயன்மார்களில் ஒருவரான;
நந்தனார் சிதம்பரம் கோவிலுக்குள் சென்ற
பாதையை மறைத்ததே - இந்த
சிதம்பர இரகசியம்...
தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்த ஒருவன் கோவிலுக்குள் சென்றதை
கண்ட பார்பன தீட்சிகன் ஒருவன்;
அவரை தீயிட்டு கொளுத்திவிட்டு...
சிவபெருமானுடன் ஜோதியில் கலந்ததாய்
சொல்லிய பொய்யே - இவர்கள்
கூறும் சிதம்பர இரகசியம்...
இவர்கள் வழி தோன்றியதே
பிரேமானந்தா...
நித்யானந்தா...
ஜெயேந்திரர்...
விஜயேந்திரர்...
சதுர்வேதி...
காஞ்சிபுரம் தேவநாதன்...
சித்து விளையாட்டுக்களும் - என்று
சொன்னாலும் அது மிகையாகாது...

Thursday, 16 December 2010

தலைப்பை நீங்களே சொல்லுங்க...

குடும்ப ஊடகங்கள் எதுவும்
மக்களை குழப்பாத நேரமது...
கேபிள் டிவியும், டிஷ் டிவியும்
கால்பதிக்காத காலமது...
விஸ்வரூப விளம்பரங்கள் இல்லாத வேளையது...
சந்திரிக்கா சோப்பும், நிஜாம் பாக்கும்
ஸ்பான்சர் செய்த சமையமது...
திருச்சி வானொலியும், தூர்தர்ஷனும்
தழைத்தோங்கிய தருணமது...
இலங்கை வானொலி தமிழர் இல்லமெல்லாம்
இன்பம் தந்த பொழுது அது...
பள்ளி சென்ற காலமென்பதால்
பசுமையாய் உள்ளன அத்தனையும்...
திருச்சி வானொலியில் தினந்தோறும்
வருவார் தென்கட்சி கோ.சுவாமிநாதன்...
தேநீர் அருந்திக்கொண்டே - அவர்
சொல்லும் கதையில;
எத்தணை கருத்துக்கள்? 
திரையிசை பாடல்கள் தொகுத்து வழங்க
தவறாமல் வருவார் பி.எச்.அப்துல் ஹமீது...
லீ.வீ .யின் சினிமாப்பாடல்...
இலக்கம், கரகோஷம், அன்பு அறிவிப்பாளர்
இவையெல்லாம் அவர் சொல்ல கேட்கவேண்டும்...
தென் வந்து பாய்ந்தே தீரும்...
வயலும் வாழ்வும்...
ஒலியும் ஒளியும்...
நாட்டுப்புற பாடல்கள்...
எதிரொலி என தூள் கிளப்பும் தூர்தர்ஷனில்
இரவு எட்டானால்;
இன்னொரு நிலா வரும் - செய்தி வாசிக்க...
திருமதி.ஷோபனா ரவி...
எத்தனை பக்க செய்தியாய் இருந்தாலும்
எவ்வளவு பெரிய சொல்லானாலும்
ஆங்கில பெயரானாலும்
அலட்டாமல் சொல்லி முடிப்பார்;
அழகான குரலில்...
பிறப்பால், இனத்தால், மதத்தால்
வேறுபட்டிருந்தாலும்;
என் தலைமுறைக்கு இவர்கள் ஊட்டிய
தமிழ்ப்பால் இன்றும் சுவைதரும்... 

Wednesday, 15 December 2010

PERFECT SALESMAN...

ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது...
ஆமாங்க.....
எத்தனையோ பஸ் ஸ்டாண்டு பாத்திரிபீங்க...
ஆனா மாயவரம் பஸ் ஸ்டான்டோட
அழகே அழகு...

எப்பவுமே மக்கள் கூட்டம்...
எங்க பாத்தாலும் பழக்கடையும் பூக்கடையுமா
ஒரே களேபரமா இருக்கும்...

அஞ்சு மணி ஆனா?
அதோட அழக சொல்லி மாளாது...
சொல்லவும் முடியாது...

அவ்வளவு கன்னியர் கூட்டம்...

செயின்ட் பால்ஸ்...
குருஞான சம்பந்தம்...
கேள்ஸ் ஹை ஸ்கூல்-ன்னு
பள்ளிக்கூடம் படையெடுக்கும்...

போதாததுக்கு...
ஏ.வி.சி...
ஞானாம்பிகை...
பொறையார்...
பூம்புகார் காலேஜ்-ன்னு
கல்லூரிகள் களைகட்டும்...

எல்லாரையும் பத்திரமா பஸ்
ஏத்திட்டு நாம பஸுல ஏறும்போது
என்னை கவறுவார் ஒரு Salesman...  
டீக்கா ட்ரஸ்...

கழுத்துல டை...
கையில பை...
இதெல்லாம் எதுவுமே இருக்காது...
கைலிதான் காட்டியிருப்பார்...

வாயில பொய் மட்டும் இருக்கும் - அதுவும்
இல்லன்னா பொழைக்க முடியாதே?

பஸுல எல்லாரும் ஏறி உக்காந்த உடனே
அவர் குரல் கேட்கும்...

எல்லாரும் ஒரு ரெண்டு நிமிஷம் பாருங்க சார்...
அம்மா இங்க பாருங்கம்மா...
காட்டுத்துளசி...
வீட்டுத்துளசி...
ஆட்டுத்துளசி...
மாட்டுத்துளசி...
இதுபோன்ற
ஆறு விதமான துளசியில் இருந்து
தயாரிச்ச துளசி தைலம் இது...
பாருங்க சார்...

இத ஒரு சொட்டு எடுத்து ஒரு பக்கம்
வச்சீங்கன்னா ஒரு பக்கதலைவலி போகும் சார்...
இத ரெண்டு சொட்டு எடுத்து ரெண்டு பக்கம்
வச்சீங்கன்னா இரு பக்கதலைவலி போகும் சார்...
இது மட்டும் இல்ல சார்...
ஜலதோஷம்
மூக்கடைப்பு
உடல்வலி
கைகால் குடைச்சல்
வாயு
பித்தம்
இப்படி எல்லா பிரச்சனைக்கும்
இத உபயோகிக்கலாம் சார்...
இந்த தைலத்தோட எம்.ஆர்.பி பாத்திங்கன்னா
இருபத்தி ஐந்து ரூபா சார்...
ஆனா கம்பனி விளபரத்துக்காக;
நாங்க பத்து ரூபாய்க்கு தரோம்...
வண்டி கிளம்ப போகுது வேனுங்குரவுங்க
வாங்கிக்கலாம் சார்...

தம்பி... அந்த அம்மாவுக்கு ஒன்னு குடு...
வாங்கி பாருங்க சார்...
இந்த கம்பனியோட அட்ரஸ் பின்னாடி இருக்கும் சார்...
தைலம் பிடிக்கலன்னா?
உங்க பணம் வாபஸ்...
என்று சொல்லி...
ஒரு பத்து பாட்டில் வித்துடுவார்;
அந்த PERFECT SALESMAN...

இங்க என்னடான்னா
M.B.A - International Marketing...
Laptop...
Strategy...
Analysis
Sales Meeting...
D.S.R 
Conference Room
இதெல்லாம் வச்சிக்கிட்டு

Dear Sir,
We have been putting our sincere efforts. But still we are lacking behind in modern equipments and technology. Despite of this we have done so much and things are in the pipe line...

அப்படின்னு மெயில் அனுப்புறான்;
மும்பை அலுவலகுத்துக்கு...
இப்ப புரியுதா யாரு PERFECT SALESMANன்னு...

Tuesday, 14 December 2010

மொக்க ராசு...

படித்ததென்னமோ கணினி தொழில்நுட்பம்
என்றாலும் - சென்னையில்
எனக்கு கிடைத்தது
விற்பனை பிரதிநிதி வேலையே...
புழலருகில் இருப்பிடம்;
வில்லிவாக்கம் அலுவலகம் - எனக்கு...
அம்பத்தூர், கிண்டி, வியாசர்பாடி
என்று தொழிற்ப்பேட்டைகளில் தொடங்கினேன்
என் நடைபயணத்தை...
நடந்த தூரத்தை அன்று சாயங்காலமே 
சொல்லிவிடும் - என் சட்டையில் பூத்த உப்பு...
என்னதான் சிரமம் இருந்தாலும்
சின்ன சின்ன சந்தோஷங்களை - நான்
இழக்கவேயில்லை...
அப்போதுதான் ஆரம்பித்தேன் புகைவிட...
நான் விட்ட புகையில்;
புழலே புலம்பியிருக்கும்...
பள்ளி நண்பன் ஒருவன் உதவியால்
கோடம்பாக்கத்தில் குடியேறி... 
கிரெடிட் கார்ட் விற்க கிளம்பினேன்...
சொந்த ஊர் செல்லும்போதெல்லாம்
யார் கேட்டாலும்;
பேங்க் வேலை என்றே சொல்வது வழக்கம்...
அனைவரும் வாயை பிளப்பார்கள்...
சென்னையில் ஒரு நாள் இரவு...
நானும் என் நண்பனும்;
கடைக்கு சென்று திரும்புகையில்...
சற்று வயதான குடிமகனை சந்திக்க நேர்ந்தது...
தள்ளாடிய அவரிடம்;
சற்று பணிவாக பேசினோம்...
What are you doing? என்றவர் கேட்க...
ஊரில் பெருமையோடு சொல்வது போல்
வங்கியின் பெயரை சொல்லி
Working as a Sales Executive என்றேன்...
Sales Executive? Oh Broker!!! என சொல்லி
சென்று விட்டார் நக்கலாக...
அதை சொல்லி சொல்லி சிரித்தோம்...
அன்று நாள்முழுதும்...
ஏன் இன்று நினைத்தாலும் சிரிப்பதுண்டு 
மனதிற்குள்...
ஒரு மொக்கைகிட்ட போயி;
மொக்கை வாங்குனோமே என்று...

அறுபத்தி நான்காம் நாயன்மார்...



சிவனடியார்களாக
போற்றப்படும் நாயன்மார்கள்;
அறுபத்தி மூவரென்பதே - நம்
அனைவரின் கணக்கு...

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்,
மாணிக்கவாசகர், கண்ணப்பர்,
நந்தனார் - என
நீள்கிறது அப்பட்டியல்...

நாயன்மார்களில் பெண்களும்
உண்டென்பதே அதன் தனிசிறப்பு...
சேக்கிழார் பெருமான் எழுதிய
பெரியபுராணம்;
அறுபத்தி மூவரின்
வரலாற்றை பறைசாற்றும்...

இப்பட்டியலில் இன்னொருவர்
உண்டென்பதே என் கருத்து...

சிவநெறி போற்றி;
அவன் தொண்டு செய்வதற்கே;
வாழ்ந்த நாயன்மார்களும் உண்டு...

சிவனடியார்க்கு செய்யும் தொண்டே;
அவன்தொண்டெனக்
கருதிய நாயன்மாரும் உண்டு...

அவர்தான் திருக்குறிப்புத்தொண்டன்...
அவரைப்போலவே இவரும் ஒருவர்!

மூவர் எழுதிய...
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பணித்த சடையும் பவழம்போல் பால்மேனியும்
இனித்தமுடனேடுத்த பொற்பாதமும்;
பொற்பாதமும் காணப்பெற்றாள்...
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே" என்ற
தேவாரப் பண்ணிற்கு - மெட்டமைத்து...

உருகாதார் யாருமற்ற;
திருவாசகத்திற்கு இசையமைத்து...
கோடானகோடி தமிழர்க்கு;
கடவுளையும், கன்னித்தமிழையும்  ஒருசேர
தன் இசைத்தேன் தடவி
விருந்தளித்த இறைதொண்டன்;

இராசையா நாயனாரே - அந்த
அறுபத்தி நான்காம் நாயன்மார்...

Sunday, 12 December 2010

போங்கடா... போயி பொழப்ப பாருங்க...


உயிரே...
உணர்வே...
ஊற்றே...
தமிழே...
தனலே...
கடலே...
கதிரே...
காற்றே...
ஞாயிறே ...
ஞாலமே...
ஞானமே...
ஞானியே...
வள்ளலே... 
அரசே...
தங்கமே...
சிங்கமே...
இப்படி எங்கு பார்த்தாலும் 
ஒரே போஸ்டர்கள் - சாலையின் 
இருமருங்கிலும்...
ஆளுங்கட்சியை ஆராதனை  செய்ய 
வைக்கப்பட்ட இதுபோன்ற விளம்பரங்கள்...
ஆக்கிரமித்தது சென்னை நகரம் முழுவதும்...
ஆணை பிறபித்த அரசாங்கமே - அதை
மீறியதுதான் கொடுமை...
முற்றும் அறிந்த; 
முத்தமிழ் அறிஞருக்கு...
சற்றும் சளைத்தவர்கள் நாங்களல்ல - என்று
போட்டிக்கு போஸ்டர் வைத்தது 
எதிர் கட்சி...
நாட்டுக்கு நல்லது பண்றதுக்கு
யாரும் இல்லை என்றாலும்...
அறிக்கை விடவும்...
இப்படி அராஜகம் செய்யவும் - இதுபோன்ற
ஆட்களுக்கு பஞ்சமே இல்லை...
தலைவர்கள் மெல் எனக்கு கோபமில்லை...
தன் காசை வீணாக்கும் தொண்டன்மேல்தான்... 
கட்சி விளம்பரத்துக்கு செஞ்ச செலவுக்கு...
குடும்பத்தோட சுற்றுலா போயிருந்தா?
கட்டியவலாவது மெச்சியிருப்பாள்...
கட்டிலாவது களைகட்டியிருக்கும்...
.........................................................................
போங்கடா...
போயி பொழப்ப பாருங்க...
புள்ள குட்டிய நல்லா படிக்கவையிங்க...

Friday, 10 December 2010

புடவை கலாசாரம் - ஒரு பார்வை...


கெடக்குறது கெடக்கட்டும்...
கெழவன தூக்கி மனையில வை...
என்றப் பழமொழிக்கு தகுந்தாற்போல்.
ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கும்போது
உனக்கு ஏன்  இந்த தேவையில்லாத வேலைன்னு;
நீங்க கேக்குறது எனக்கு புரியுது...
அதுக்கொரு காரணமும் இருக்கு.
நெருங்கிய தோழி ஒருத்தியிடம் பேசும்போது
இந்த விஷயம் தெரியவந்தது... 
இதை பற்றி பேசணும்னா
பதினஞ்சி இருவது வருஷம்
பின்னோக்கி செல்லனும் - கமல் சொல்வது போல...
ஊரில் எங்கு பார்த்தாலும்
கல்யாணம் ஆன பெண்கள் சேலையிலும்;
கன்னிப்பெண்கள் தாவணியிலும்;
ஒரு கலக்கு கலக்குவார்கள்...
கொஞ்ச நாள்ல...
செளகரியம் காரணமாக
விட்டில் நைட்டியும்
வெளியில் ச்சுடியும் மிக பிரபலம் ஆனது...
பிறகு மிடி, ஜீன்ஸ் என்று
நவ நாகரீகமாக
அடையாளம் காணப்படும்
அனைத்து ஆடைகளும் பிரசித்துபெற்றது...
ஆக கி.மு.28ம் நூற்றாண்டில்
தோற்றுவிக்கப் பட்டதாக சொல்லப்படும்
ஒரு கலாசாரம்...
சற்றே நகர்ந்து நகர்ந்து - இன்று
தொலைதூரத்தில் உள்ளதாகவே தோன்றுகிறது... 
வீட்டுல எதாவது விஷேசம் வந்தா?
வடை பாயசம் செய்யிற மாறி ஆகிபோச்சு...
இந்த சேலை கட்டும் பழக்கமும்.
இதுக்கு அவங்க சொல்லுற விளக்கத்த
நீங்களே கேளுங்க?
1.செளகரியமா இல்ல...
2.உடுத்திக்கொள்ள எளிமையா இல்ல...
3.உடுத்தவே தெரியாது...
4.என்னதான் புதுரகம் வந்தாலும்;
  ரொம்ப பழமையா இருக்கு...
5.பரிகாசம் செயிறாங்க!!!
பெரியவங்கன்னு ஒரு பேச்சுக்கு
சொன்னேனே தவிர!!!
நம்ம பொலம்பல் எல்லாம்;
பொண்ணுங்கள பத்திதான்...
இவ்வளவு காரணம் சொல்லி
பொடவைய ஒதுக்குறீங்களே...
நீங்க கடைசி பயணம் போகும்போது
உங்க மேல போத்துறது புடவையதான்!!!
ஜீன்ஸோ, டீ ஷர்டோ இல்ல...
நான்  ஏன் இவளோ ஆதங்கப் படுறேன்னு
நீங்க கேக்கலாம்?
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
சார்பா கேக்குறேன்...
இந்த பயபுள்ளைங்க
பொடவையத்தான் விரும்புதுங்கன்னு!!!
உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது?

Wednesday, 8 December 2010

Mujhe Faq Rahe...


காலையில எந்திருச்சு...
கடைத்தெருவுக்கு நடந்து போயி...
காபித்தண்ணி குடிச்சிபுட்டு...
கடவாயில பொகையல அடக்கி...
கோழி கூவும் நேரத்தில...
கோமனத்த இருக்கிகட்டி...
கெழக்க செவக்கும்போது...
கலப்பைய தூக்கிக்கிட்டு...
கழினியில கால்பதிச்சு...
காட்டுலயும் மேட்டுலயும்...
காலம் நேரம் பாக்காம...
குடிச்ச கஞ்சி செரிச்சு போயி...
கும்மிருட்டு வரும்வரையில்...
குடும்பத்தோட வேலை செய்யும்...
நம்ம குமரேசன்!!!
கடன்தொல்ல தாங்காம - 98ல
தூக்குல தொங்கிட்டான்...
இது எங்க ஊரு குமரேசன் கதை.
இதேமாரி
1997 முதல் - 2008 வரை மொத்தம்
1,99,132 குமரேசன்கள்  செத்திருக்காங்க...
இதெல்லாம் பத்தி கவலைப்பட இங்க ஆள் கெடயாது...
இந்த மக்களோட ரத்தத்த குடிச்சு...
பாவப்பட்ட வயித்துல அடிச்சி...
ஊழல் பண்ணி சம்பாரிச்ச - நம்ம
இந்திய அரசியல் வாதிகளும்...
சினிமா பிரமுகர்களும்; தொழிலதிபர்களும்...
திருட்டுத்தனமா சுவிஸ் பேங்க்ல போட்டிருப்பது  
இருபது லட்சம் கோடியாமே!!!
அடப்பாவிகளா...
இவ்வளவு பணம் இருக்கும்போது
ஏண்டா போயி உலகவங்கி காலில் விழுறீங்க?
வெக்கமா இல்லையா உங்களுக்கெல்லாம்?
அங்குள்ள  பணத்தை எடுத்து வந்தா?
இங்க ஏதுடா வருமைகோடு?
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை
நிர்ணயிக்கும் முக்கிய காரணியாம்
விவசாயத்திற்கும், விவசாயிக்குமே 
நிலைமை இதுவென்றால்...
நிச்சயமாக சொல்லமுடியும்;
அழிவின் பாதையில் அனைவரும் செல்கிறோமென்று...
எது எப்படியோ சுவிஸ் வங்கியில்
பணம் பதுக்குவதில் நாம்தான் முதலிடம்...
மார்தட்டி சொல்வேன்...
இந்தியனாய் இருப்பதில்
Mujhe Faq Rahe...

Monday, 6 December 2010

கருப்பு நாள்...

மனிதனை நெறிமுறைப்படுத்தி
நற்குணங்கள் புகட்டி...
அன்பைக் கொடுத்து
அறிவைக் கொணர...
கற்பனையும், கவிநடையுமாய்
சொல்லப்பட்டதே - இந்த
இதிகாசங்கள்....
கற்பனையாய் சொன்னது - கயவர்களால்
கலவரமாய் போனது...
ஆம் இந்துக்கள் புனிதபூமியாய்
போற்றும் அயோத்தி - அதுதான் கதைக்களம்...
கதைப்படி ராமர் இங்கு வந்து பிறக்க...
ராமாயணம் பிறந்தது - இது இதிகாசம்...
கதையில் வந்தவன் கடவுளானதால்?
கலவரமானது அயோத்தி...
1527ம் ஆண்டில் கட்டப்பட்ட
பாபர் மசூதியை...
கலவரக்காரர்கள் 1992ம் ஆண்டு
தரைமட்டமாக்கினர்...
அந்த இடத்தில் ராமர்கோவில் இருந்ததாம்
அதை இடித்துதான் மசூதி கட்டப்பதாம்...
இப்படித்தான் சொன்னார்கள் - அந்த
இழிசெயலை செய்தவர்கள்...
இந்துத்துவம் பேசுவோர் 
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லட்டும்... 
ராமார் கோவிலை இடித்துவிட்டுத்தான்
பாபர் மசூதி கட்டப்பட்டதெனில்;
கோவிலை இடிக்கும்போது நீயென்ன 
காவியம் பாடிக்கொண்டு இருந்தாயா?
நான் சொல்லட்டுமா?
காபுலில் இருந்து கால்பதித்த - பாபரின்
கால்நகத்தை கூட நெருங்க பயமுனக்கு...
எப்போது வந்தது - உனக்கு இந்த
இந்துத்துவ சிந்தனை?
மன்னராட்சி முடிந்த பின்பா?
ஆங்கிலேய ஆட்சியிலா?
அப்போதெல்லாம் வராத
உன் பக்தியும் கடவுளும்;
கொடூர புத்தியும்!
எப்படித்தான் வந்ததோ
ஆர் எஸ் எஸ் வந்தவுடன்?
பாபர் மசூதி இடிப்பு - கடும்
கண்டனத்திற்கு உரியதே...
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும்
ஒவ்வொரு டிசெம்பர் ஆறும்
நமக்கு கருப்பு நாளே...

Saturday, 4 December 2010

உயிரிலும் மேலான... அன்பு உடன்பிறப்பே...


தவறை சுட்டி காட்ட யாருமில்லை...
அவரை தட்டிகேட்க  ஆளுமில்லை...
நாளிதழ் ஒன்றுண்டா நடுநிலையாய் செய்தி சொல்ல?
தொலைகாட்சி ஒன்றுண்டா தோண்டித்துருவி ஆராய?
எழுத்துறிமை, பேச்சுரிமையென - இன்னும்
பல இழந்தபின்னும்...
ஏன் இந்த பொறுமை - தமிழனுக்கு?
இங்கிலாந்தில் தமிழர்கள் போராடமுடியும்...
இந்திய நாட்டில் முடியாது...
இதுவன்றோ ஜனநாயகம்...
தமிழ்நாட்டில் அதைவிட கொடூரம்
தனியொரு குடும்பம் தரனியாள்வதை பார்த்தீரா?
அண்ணாவின் பெயரை சொல்லி;
அவரவர்க்கு முடிந்தவரை...
அனைத்தையும் சுருட்டுப்பாற்கும்;
திராவிட கட்சிகள்...
இந்துத்வா, காந்தியவாதம் 
பொதுவுடைமை எனச்சொல்லி...
தெளிவாய் குழப்பும்;
தேசியக்கட்சிகள்...
இதற்கும் மேலாய்
குடியரசு தலைவர்...
பிரதம மந்திரி...
பாராளுமன்றம்...
உச்சநீதிமன்றம்...
மாநில அரசுகள்...
அமைச்சர் பெருமக்கள்...
தேவையா இவையனைத்தும்?
ராணுவ ஆட்சி வரட்டும்...
கரைவேட்டிகள் காணாமல் போகட்டும்...
வழுக்கைத்தலையன் வாரியடித்து ஓடட்டும்...
எதற்கெடுத்தாலும் ஒரு விழா...
ஆட்சி நடத்த வாக்களித்தால் - நீ அமர்ந்து
ஆட்டமா பார்க்கிறாய்?
தந்திர நரியே...
சுயநலப் பாம்பே...
தமிழர்கள் சிந்திய குருதிக்கெல்லாம்!!!
தவியாய் தவிப்பாய் நீயே பாரும்...
தழுதழுத்தாலும் உன் வாய்துடைத்து;
தமிழனை உடன்பிறப்பே என்பாயே!!!
அதுதான் உன் பலமோ... 

Thursday, 2 December 2010

சனிக்கிழமை சாயங்காலம்...

அழகிய மாலைப்பொழுது - அன்று
அனைவருமே குதூகலிக்க...
சுட்டெரித்த வெயிலும் - சற்று
சாந்தமாய் சாயும் வேளை...

இறக்கை படபடக்க இருட்டும் முன்னரே - தன்
இருப்பிடம் தேடி பறந்தன பட்சிகள்...
பறவைகள்  மட்டுமா - பாழாய்ப்போன
மனிதனும் சாலையில் பறக்க...

சிறப்பு வகுப்புகள் முடித்து சிறகடித்து சென்றது 
சிறுவர்கள் கூட்டம்...
சாயங்கால பூஜைக்கு காந்திருந்தார் - நம்
சாலையோர பிள்ளையார்...

கல்லூரி பேருந்து கண்முன் நிற்க - தன் 
காதிலியைத்தேடும் காளையர் கூட்டம்...
கைபேசியில் மனைவி அழைக்க;
கையை பிசையும் கணவன்மார்கள்...

சமத்தாய் குடும்பத்தோடு கோவிலுக்கு ஒரு கூட்டம்!
சமுதாய சிந்தனையோடு குடிக்க ஒரு கூட்டம்!
இப்படி அனைவரும் ஆளாய்ப்பறக்க...

வயதான தம்பதி ஒன்று
வழியில் தென்பட்டது...
பார்த்த கணமே புரிந்தது  - அது
பாதி நூற்றாண்டு காதலென்று...

காதலுக்கு அர்த்தம் சொல்லி - மெல்ல
காலடிபோட்டது அந்த ஜோடி...
இவரோன்று சொல்ல - புன்னகைத்து 
அவரொன்று சொல்ல...
இருவருமே நடந்தனர் சற்று
பொறுமையாகவே.....

காதலென்பது வேதியியல் மாற்றமல்ல - உயிர்
வாழும் இயலாற்றல் - எனப்  
புரியவைத்தது அந்த தளர்ந்த நடை...

இதுவே காதல்...
இதுதான் காதல்...
என்றென் காதில் ஒலிக்க...
சுவாரசியமாய் போனது - அந்த
சனிக்கிழமை சாயங்காலம்...

புலவர் பாணபத்திர ஓணாண்டி...


நீரா நீரா ராடியா...
நீ இங்க ஓடியா...
பதவி வாங்கி குடுத்தியா?
பங்கும் நெறைய கேட்டியா?
பெரிய பெரிய ஆட்கள்கூட  வச்சிருந்த பங்கு...
பத்திரிக்கை காரனுக்கும் உன்னோட லிங்க்கு...
இங்கிலாந்தில் குடியுரிமையுள்ள நீயும் இப்படி...
இந்தியாவின் அமைச்சர்களை உருவாக்கியதெப்படி...
மாட்டிக்கிச்சு உன்னோட உரையாடல் டேப்பு...
வச்சிப்புட்ட எல்லாருக்கும் உன் சைசுல ஆப்பு...
கண்ணமூடி ஆள காட்டு இங்க எவன் இருக்கான் காந்தியா?
கவலையே படவேண்டாம் நீ இருப்பது இந்தியா...