Thursday, 27 January 2011

காதலென்ன கத்திரிக்காயா?

பால்குடி மறக்காத
பிள்ளையின் அழுகை
என்றே பெற்றோர்கள்
நினைப்பதுண்டு...

காலம் தரும்
மருந்தினால் - இந்தக்
காதல் புண்ணும்
ஆறுமென்று...

அழுகின்ற
குழந்தைக்கு
ஆறுதல்
சொல்வது போல...

அழகாய்
விளக்கங்கள்
ஆயிரம்
சொன்னாலும்...

அவர்கள்
ஏற்க மறுப்பது
ஏன் என்று
நினைத்ததுண்டா?

அவர்கள் வாழும்
உலகமே வேறு - அதை
உற்றுநோக்கி
நீயும் பாரு...

கண் விழித்து
பார்க்கும்போது
கண்முன்னே
அவள்முகம்...

கண்ணாடி நான்
பார்த்தால் - என்  
முன்னே அவள்
நிற்ப்பாள்...

நின்றாலும், நடந்தாலும்
உண்டாலும்; 
நினைவில் எப்போதும்
அவள் ஞாபகம்...

அவளைப்
பார்க்காத நாள் 
எனக்கு பைத்தியம்
பிடிக்கும்...

ஒட்டுமொத்த
உலகமே - அவள்
ஒருத்தியை
சுற்றித்தான்...

என்பவனிடம்
பெற்றகதை
வளர்த்த கதை
எடுபடுமா?

அல்லது
பெற்றவளின்
கண்ணீர்தான்
விடை தருமா?

மனம் மாறி
வந்தாலும்
பிள்ளையின்
மனவேதனை தீருமா?

ஒப்பந்தம்
போடுவோமே - அவர்கள்
காதலை
ஒற்றுக்கொள்ள...

வளர்ந்து காட்டச்
சொல்வோம்...
வாழ்வில் வென்று
காட்டச்சொல்வோம்...

பெற்றோர், சமுதாயம்,
எதிர்காலம் இவ்வனைத்தையும்
தாண்டி துளிர்விடும் ஒன்று
நன்மைக்கு பயன்படட்டும்...

காதலும்
ஒரு நெருப்புதான்
பிள்ளைகள் கருகுவதை
பார்த்ததில்லை?

வேறு இடத்தில
திருமணம் என்றால்
வேரூன்றிய காதல்
போய்விடுமா?

பறித்தவுடன்
மீண்டும் காய்க்க...
காதலென்ன
கத்திரிக்காயா?





Tuesday, 25 January 2011

உன்னைப்போல் ஒருவன்...

காகம் 
இறந்துபோனால்
கலவரமாகுது - எங்கள்
மொட்டைமாடி...

நாயொன்றின் 
உயிர்பிறிந்தால்
நள்ளிரவு நண்பர்களின்  
ஒப்பாரி...

ஓலைப்பாம்பொன்று
உயிர்துறந்தால்
ஒட்டுமொத்த பாம்புகளின் 
அணிவகுப்பு...

எறும்புகூட
தன் துக்கத்தை
இயல்பாய்
வெளிப்படுத்தும்...

காக்கைக்கும்
நாய்க்கும்
எறும்புக்கும்
உள்ள குணம்...

தமிழனுக்கு
ஏனோ இன்னும்
தட்டுப்படவே
இல்லை...

தனது இணம்
வேரருக்கப்படுவதை
எந்த இனமாவது
பார்த்து ரசித்ததுண்டா?

கண்ணாற
கண்டோம்...
காதாற
கேட்டோம்...

இலங்கையில்
நடந்ததை
இறையாண்மை
என்றோம்...

இந்த மண்ணில்
நடக்கும்போது
எதைசொல்லி
தவிர்ப்போம்...

மாணவன்
தாக்கப்படுவான்
என்றதும்
பொடா பாய்ந்ததே...

எங்கள் மீனவன்
தாக்கப்படும்போது
ஏன் எதுவுமே
பாய்வதில்லை?

மனித உரிமை
கழகமென்ன
மன்னையா
தின்கிறது?

மந்திரி பதவிக்கு
மட்டும்
டெல்லிக்கு போகும்
தந்திரக் கிழவன்...

தமிழன் உயிரென்றால்
தந்தியும் கடிதமும்
அனுப்புவானாம்?
அதை மத்திய அரசு ஏற்க்குமாம்... 

முத்துக்குமாரின்
மரணத்தை அரசியலாகினார்களே...
ஏன் மீனவன் சாவை
கையிலெடுக்கவில்லை...

கேட்டுகொண்டே போக
கேள்விகள் ஆயிரமுண்டு...
கேட்கும் யோக்கியதை
எனக்கென்ன இருக்கிறது...

நானும்
உங்களைப் போல்
ஒருவன் தானே...

- பத்மா சுவாமிநாதன்

ஜீவநதி

பிறக்கும்போதும்
அழுதிட்டோம்...
பிறந்தபின்னும்
அழுதிட்டோம்...

உறக்கம் வரும்வரை
அழுதிட்டோம்...
உறங்கி பின் விழிக்கையில்
அழுதிட்டோம்...

பசித்தபோதும்
அழுதிட்டோம்...
பலகாரம் வேண்டி
அழுதிட்டோம்...

பள்ளி செல்கையில்
அழுதிட்டோம்...
பாடம் படிக்கையில் 
அழுதிட்டோம்...

பெண் வாழ்வில்
வந்துவிட்டால்
பேரழுகை
நாம் கொண்டோம்...

பேதை அவள்
பிரிந்து சென்றால்
தாடி வைத்து
தழுதழுத்தோம்...

வேலை, குழந்தை,
பெற்றோர், உற்றார்,
இவ்வனைத்தும் தழைத்தோங்க
இமை மூடி அழுதிட்டோம்...

இறுந்தவன் 
இறந்துபோனால் 
இரவு பகலாய்
அழுதிட்டோம்...

வற்றாத ஜீவநதி
தமிழ்நாட்டில் இல்லையாம்!!! 
வற்றியதே இல்லை
எங்கள் ஜீவன் வற்றும் வரை...

Thursday, 20 January 2011

கரத்தான் நைனா...

ஒவ்வொரு அமாவாசையும்
எங்க ஊருல ஹொலிடே...
யாரும் வேலைக்கு போக கூடாதுங்குறது
ஊர் கட்டுப்பாடு (உத்தியோகஸ்தர்கள் தவிர)...
நடவா இருந்தாலும் சரி...
நாத்து பறியா இந்தாலும் சரி...
எந்த வேலையும் நடக்காது...
ஊர் பிரச்சனை...
வாய்க்கா வெட்டு...
குளம் குத்தகை...
புளியமரம் குத்தகை...
போதுவடை நிலம்...
இதப்பத்தியெல்லாம் பேசுற;
ஊர் கூட்டம்...
எங்க ஊரு சட்டசபை...

ஊர் மத்தியில இருக்கிற
மாரியம்மன் கோயில் தான் ஸ்பாட்...
ஊருல உள்ள பெருசு எல்லாம்
ஒன்னு ஒண்ணா வந்து சேரும்...

பாத்து மணி வாக்குல;
கிட்ட தட்ட எல்லாரும் வந்துருவாங்க...
ஒரு ஆள் தவிர...
அவர்தான் "கரத்தான்"...
நாங்கள்லாம் நைனான்னு கூப்பிடுவோம்...

ஆளு லேட்டா வந்தாலும்
அவர் வந்தாதான் கூட்டமே களைகட்டும்...
உள்ள வந்த உடனே;
மடியில இருக்கிற மூக்குப்பொடி டப்பாவ எடுத்து
தலைல ரெண்டு தட்டு தட்டுவாரு...
அவ்வளோதான்...
இளவட்டமேல்லாம்
குதூகலம் ஆயிடும்...
எல்லாரும் இப்படியே இருந்தா
என்னா அர்த்தம்?
யாராவது ஆரம்பிங்கப்பா - ன்னு
ஒரு குரல் கேக்கும்...

அதாகப்பட்டது....
குறுவை சாகுபடிக்கு நாள் ஆயிடிச்சி...
ஆத்து தண்ணிய நம்பிதான் இருக்குறோம்...
போன வருஷம் வெட்டுன வாய்க்கா துந்துடிச்சு...
இந்த வருஷமும் வாய்க்கா வெட்டனும்...
அதுக்காக தான் இந்த கூட்டம்-னு
ஆரம்பிப்பாரு நாட்டாமை...

மூக்குப்பொடியின் நெடி
மூளைக்கேற நைனா
கிடுக்குப்புடி போடுவார்...

அதெல்லாம் இருக்கட்டும்
போன வருஷம்
வாய்க்கா வெட்டு
வரவு செலவு கணக்கு
ஏன்னா ஆச்சு?

கூட்டத்தில் காரசாரம்,
கூச்சல் குழப்பம்
வெடிக்கும்...
எங்கு பாத்தாலும்
முட்டா பு...
மட பு...
கெழ பு... இப்படி
திரும்பிய பக்கமெல்லாம்
பு... வாசம் வீசும்.

அங்கதான் நிப்பார் நைனா
எவன்டா இது
புநா...
சுநான்னு கெட்ட வார்த்தை
பேசிக்கிட்டு...
பெரியமனுசன்
சின்ன மனுஷன்
மரியாதையில்லை?
இதே வேலை பு... யா இருக்கு
உங்ககூட...
முட்டா பு...யோல
................................................................
எவன் எத வெட்டுனா
எங்களுக்கென்ன?
சின்ன பசங்க நாங்க
சிரிச்சிக்கிட்டே இருப்போம்...
இப்பவும் நடக்கும்
இந்த கூத்து...
நைனாவுக்குதான்
வயசாயிடிச்சி - ஆனாலும்
அவர் மூக்குப்பொடியையும்
விடல...
முநா புநாவையும் விடல...

மும்மூர்த்திகள்...

கால் பதிக்க
ஆளில்லா
காலத்தே
தலைநகரில்
தடம் பதித்து...
நூல் பதிக்கும்
அளவுக்கு
நுணுக்கங்கள் கற்றவர்...
நிதானத்திர்ற்கு
நிகரான சொல்
உண்டென்றால் - அது
இவர் பெயராகத்தான் இருக்கும்...
தொடர்ந்து வந்த பாதையில்
இடர்ந்து கிடந்த கற்களையெல்லாம்
அழகாய் அடுக்கி வைத்து
அதன் மேலேயே - கால்
அடியும் வைத்து
உயரம் ஏறிய சிகரம்...
"திரு. மகேஷ் பாபு"

..................................................
அடுத்து வருபவர்
செட்டிநாட்டு தங்கம்...
பலரது வாழ்வை
செட்டிலாக்கிய சிங்கம்...
அனுபவித்த இன்னல்கள்
அனைவருக்கும் வேண்டாமென்று
அனுபவ செல்வாக்கை
அளவாய் பிரயோகிப்பார்...
விற்பனை பிரதிநிதியாய்
வீதியிலே சுற்றிய என்னை
வழி இதுவல்ல...
வாழ்வின் தடத்தை - என்னோடு 
வா காட்டுகிறேன்
என்றார்...
அடுத்த நாளே
அனுப்பிவைத்தார் 
தினகரன் அலுவலகத்திற்கு...
உதவும் குணத்திற்கு
உயிர் வாழும் உதாரணம்...
"திரு.ராமநாதன்"

...........................................................
மூன்றாம் மூர்த்தி
தேனி தந்த
தேனீ...
தந்தி தந்த
ஞானி...
ஊடகத்துறை
சந்து பொந்தெல்லாம் - பள்ளி
ஆசிரியர் போல
உக்கார வைத்து
சொல்லித் தந்தவர்...
புள்ளி விவரம் யாவும்
புத்தியில் புகட்டுவார்...
வாடிக்கையாளர் சந்திப்பு
என்றால் - நம்மோடு
வரிந்துகட்டி புறப்படுவார்...
தட்டியும் கொடுப்பார்
பல பேர் பார்க்க
திட்டியும் தீர்ப்பார்...
எளிமையின் இலக்கணம்
"திரு.ராஜேஷ் கண்ணன்"

............................................................
இம்மூவருக்கும்
பங்குண்டு...
இம்மாமடையனை
மெருகேற்றியதில்...
இவர்கள் மூவருக்கும்
ஒரு தொடர்புண்டு...
இந்தியன் எக்ஸ்ப்ரஸின்
முன்னாள், இந்நாள்
மேலாளர்கள்...
மும்மூர்த்திகளுக்கு என்
காலந்தாழ்ந்த
வணக்கத்தை...
உரித்தாக்குகிறேன்...

Tuesday, 18 January 2011

விதவைப் பொங்கல் 2011...


காதல் மயக்கத்தில்
கதவருகே நான் நின்றால்...
காதோரம் சொல்வாயே
கவிதைகள் கண்ணாளா...

இச்சை எதுவென்று
எதை பார்த்து உணர்வாயோ...
இழுத்து அணைப்பாயே
இன்பம் தருவாயே...

போனால் ஒன்று...
வந்தால் ஒன்று...
நின்றால் ஒன்று...
நடந்தால் ஒன்றென்று...

நித்தமும்
உறைந்திடுமே...
என் சித்தம்
உன் முத்தத்தால்...

பித்தம் தலைக்கேற
பிதற்றும் எனையனைத்து 
மொத்தமும் தருவாயே
மூச்சிரைக்க மணவாளா...

இதற்காக இத்தனைநாள்
ஏங்கியதை நான் சொன்னால்
இதற்கே நான் பிறந்தேன்
என்பாயே என் கனவா...

கட்டிய தாலியில் 
இன்னும் கலர் சாயம்
போகலையே...
கட்டிய நீ ஏன் போன?

எவ்வளவோ
சொன்னேனே
இந்த வருஷம்
வேணாமுன்னு...

புள்மேடு பாதையில
திரும்பி வந்தா - வீட்டுக்கு
சீக்கிரம் வரலாமுன்னு
வந்தியா?

பேப்பர்ல உன் பெற
பாத்ததுமே...
போயிடிச்சே என்
உசுரு...

அதிர்ச்சியில கருச்சிதைவு
ஆச்சுதின்னு
சொல்லையில
நின்னே போயிடிச்சு முச்சு...

கிழிஞ்ச
துனியா
ஆயிடிச்சே
என் வாழ்க்கை...

நான் யாரை
குத்தம் சொல்ல?
எங்க போயி
முறையிட?

Wednesday, 12 January 2011

கலைஞருக்கு வாய்க்கரிசி...

யானை கட்டி போரடிச்ச
காலமெல்லாம்
காணாம போச்சு...

ஏறு பூட்டி சேறுகண்ட
நேரமெல்லாம்
எங்கேயோ போச்சு...

நெல்லு கொட்டும் பத்தாயம்
நிக்குது இப்ப
நிற்கதியில...

உள்ள கொட்ட
ஒண்ணுமில்லாம உடைஞ்சே போச்சு
எங்க வீட்டு குதிரு...

படியளக்கும் வெவசாயம்
அடிவயித்தில 
அடிச்சதால...

பறவையும்
மரக்காலும் 
பரணியில கெடக்குதுங்க...

கையில உள்ள
பணத்த போட்டு
கை டிராக்டர் வச்சி உழுதேன்...

காதுல மூக்குல
கெடந்தத வச்சி
கால் வாசி பயிராக்குனேன்...

களை புடுங்க
காசில்லாம
கை மாத்து வாங்குனேன்...

புகையான் அடிச்சிதுன்னு  
பொண்டாட்டி தாலிய
அடகு வச்சேன்...

வானம் பாத்த பூமி
இன்னைக்கு
விசார்ப்புக்காக காத்து கெடக்கு...

போன மாசம் மழையால
பயிரெல்லாம்
நாசமாச்சி...

அரசாங்க கணக்கு 
ஹெக்டேருக்கு
ஐயாயிரம்...

அடகு வச்ச
தாலி மட்டும்
எட்டாயிரத்துக்கு இருக்கு...

ஏக்கருக்கு
ரெண்டாயிரம்
என்ன கணக்குனு புரியல...

எங்க ஓட்டுல ஜெயிச்சவன்
கோடி கோடியா
கொள்ளையடிக்கிறான்...

ஓட்டு போட்ட
குத்தத்துக்கு
ஓட்டாண்டியா நிக்கிறோம்...

தேடி வந்து ஓட்டு கேக்கும்
தேவி..யா மொவனுங்க
தேர்தல் முடிஞ்சிட்டா ஆளே வர்றதில்ல...

கும்பிட்டு வாசல் வரும்
கு...காரி மொவனுங்க
குளிர் காயிறாங்க எங்க வயிதேரிச்சள்ள...

நாசமா போங்கடா
நாயிக்கு
பொறந்தவங்களா...

பண்றதெல்லாம்
பண்ணிபுட்டு
பொங்கலுக்கு இலவச பொருளா?

வரவேண்டியத குடுடா
வழுக்கத்தலையா - உனக்கு
வாய்க்கரிசி நாங்க போடுறோம்...

Tuesday, 11 January 2011

பொங்கலோ... பொங்கல்...

கண்ணுக்கு புலப்படும் கடவுளுக்கு - இம்
மண்ணில் விளையும் பொருள் கொண்டு
விண்ணதிர சொல்லிடுவோம்...
பொங்கலோ பொங்கல்!!!

பழையவை கழித்து புதியவை புகுத்தி
பிழைதனை திருத்திடுவோம்...
புதுமைகள் படைத்திடுவோம் - வரும்
பொன்னான நாட்களிலே...

நான்கு கால் பாய்ச்சலிலே - நம்மோடு
நாள்முழுதும் பாடுபட்ட...
கால்நடைக்கும் விருந்துவைப்போம்...
கௌரவிப்போம் அவைகளையும்...

சுற்றமும் நட்பும்..
உற்றாரும் உறவினரும் - சேர்ந்திருந்து
தைப் பொங்கல் கண்டிடுவோம் - தமிழர்
திருநாளை போற்றிடுவோம்...

Monday, 10 January 2011

The Real Culprit.....


எய்தவனை விடுத்து
அம்பை குறை சொல்வது
எவ்வகையில் ஞாயம்?

உண்டு; கழித்து பின் மஞ்சத்தில்
உறவாடும் ஒருவனை
கடவுள் என்கிறார்கள்...

அறுசுவையில் ஒருசுவையை
அவளுக்கு காண்பித்தான்...
இது எங்கும் நடக்காததா?

சும்மா இருந்தவனை
சுற்றி வந்து
சிவனாக்கிய மக்களை விடுத்து...

சிவலிங்க அமைப்பிற்கு 
செய்முறை விளக்கம்
சொன்னவனை தண்டிப்பதா?

அடித்தோம் உடைத்தோம்
அவனை அல்ல
திருப்பி அடிக்காதவற்றை

சிறைக்குள் சென்றவன் - இன்று 
சிரித்துக்கொண்டே வருகிறான்
சிறு துரும்பும் நெருங்காத பாதுகாப்போடு...

முட்டாளாய் நாம் இருந்தால் 
முறைதவறி பிறந்தோரெல்லாம்
முதல்வராக கூட வளம் வருவர்...

Saturday, 8 January 2011

எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப்பண்ண மாட்டோமா?

தென்னை மட்டையில்
தொடங்கினோம்...
தெருவெல்லாம்
ஆடினோம்...

ஓடுகளை 
உடைத்தெறிவோம்...
கண்ணாடிகளை
தகர்த்தெறிவோம்...

முட்டு சந்தும்
விட்டதில்லை - எங்களை
தார் ரோடும்
சுட்டதில்லை

வெற்றி தோல்வி இரண்டையுமே
பெற்று வந்தோம்..
வெல்ல வேண்டிய போட்டியிலும்
தோல்வியுற்றோம்...

பள்ளிப் பருவம் தொட்டு
இன்று வரை ஆடுகிறோம்...
பண்ணிய தவறையெல்லாம்
உடனுக்குடன் திருத்திடுவோம்...

ஏங்கிய நாட்கள் உண்டு
இனிமேல் முடியமா என்று...
இப்போது ஒரு வாய்ப்பு
எதற்க்கினி கவலை...

எதுவானாலும்
பார்த்துவிடுவோம்...
எவ்வளவோ பண்ணிட்டோம்
இதைப்பண்ண மாட்டோமா?

Friday, 7 January 2011

I Love You...

தேன் குடிக்கும் தருணம்
தெரிகிறது வண்டிற்கு...
அதை கொடுக்கும் நேரம்
புரிகிறது பூவிற்கு...

என்னவளின் எண்ணம் எனக்கு
புரியவுமில்லை...
என் காதல் சொல்லும் நேரம்
தெரியவுமில்லை...

ஐந்தறிவு ஜீவனுக்கு
சொல்லாமல் புரிகிறது ...
ஆறாம் அறிவை பெற்றும் நானோ 
ஈரான்டாய் தவிக்கிறேன்...

இன்றைக்கு சொல்லவேண்டும் - என
என்றைக்கோ முடிவு செய்தேன்...
இன்று வரை சொல்லவில்லை
என்று சொன்னால் நம்புவீரா?

பலமுறை ஒத்திகை பார்த்து
பகல் நேர கனவு கண்டு
விதவிதமாய் சொற்கள் கொண்டு
விவாதிக்க தயாரானேன் - என் காதலை...

அவள் முகம் பார்க்கையிலே
அத்தனையும் மறந்துபோகும்...
நினைத்துவந்த கவிதை யாவும்
பிணைத்து கொள்ளும் ஒன்றோடொன்று...

அவளே புரிந்துகொள்வாளென 
நினைத்திருந்தேன்...
அவள் நினைவை உள்ளே வைத்து
தவித்திருந்தேன்,,,

பித்தனாகி புலம்பும்போது
பின்னால் நின்றாள்...
பிதற்றாதே புலவா என
முத்தம் தந்தாள்...

இன்றும்  சொன்னதில்லை
"நான் உன்னை காதலிக்கிறேன்" - என்று...
மென்று முழுங்குவேன்
என்றவளுக்கு தெரியும்போல...

மனிதர் உணர்ந்து கொள்ள...
இது மனிதக் காதலல்ல...
பூவும் வண்டும் போல
புதிரானது எங்கள் காதல்...

இவ்வுலகிலேயே அழகான
பூ அவள்...
வேறு பூ தேடாத
வண்டு நான்...

Thursday, 6 January 2011

கலைமாமணி!!! ஞானபாரதி!!!

கடவுள் வாழ்த்து...
ஆத்தி சூடி,
இளம்பிறை அணிந்து;
மோனத்திருக்கும் முழுவென்மேனியன்...
கருநிறம் கொண்டு - பாற்கடல்
விசைக் கிடப்போன்...
முகமது நபிக்கு
மறையருள் புறிந்தோன்...
இயேசுவின் தந்தை...
எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே
உணர்ந்து உணராது...
பரவகையாக பரவிடும்
பரம்பொருள் ஒன்றே...
------------------------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து...
கதிர் வெடித்து
பிழம்புவிட...
கடல் குதித்து
சூடாற்ற...

முதுமை மிகு
நிலப்பரப்பில்...
முதல் பிறப்பு
தோன்றிவிட...

நதி வருமுன்...
மணல் சருமுன்...
பதி மதுரை பெருவழியில்...
பாண்டியர் கை பார்த்தவளே...

நின்னை யான் வணங்குவதும்...
நீ என்னை வாழ்த்துவதும்...
அன்னை மகற்க்கிடையே
அழகில்லை என்பதனால்!

உன்னை வளர்த்துவரும்
உன்புகழ் சேர்...
தென்புலவர் தம்மை வாழ்த்துகிறேன்...
தமிழ் புலவர் வாழியரோ!!!
------------------------------------------------
கலைமாமணி! ஞானபாரதி!
வலம்புரி ஜான் அவர்களின்
வைர வரிகள் இவை...
இவரின் கர்ஜனை முடிந்தால்
அவையை கரகோஷம் உடைக்கும்...
ஆங்கிலம் பிரஞ்சு என்று
பலமொழிகள் அறிந்தாலும்...
அண்ணாச்சியின் தமிழ் மோகம்
அவையோருக்கு தீர்க்கும் தாகம்...
"
தன் தாய்மொழிக்கு
தலை வணக்கம் செலுத்தாத
எந்த நாடும் வாழாது...
எந்த சமுதாயமும் வாழாது..."
என சொல்லி!
தமிழர்கள் நெஞ்சத்தில்
தனக்கென இடம்பிடித்தார்...
இந்த நாள் இனியனாலென்று - இவர்
வந்த நாளெல்லாம் இனிதாயிற்று...
இளந்தமிழ் சுவைகொண்டு...
கலந்தாட அவைகொண்டு...
சிலேடையும் சிந்தனையுமாய்...
சிந்தையுள் தோன்றியவற்றை  
சிம்மக்குரல் கொண்டு
சீர்மிகு உச்சரிப்பால் 
பாட்டுக்கள் பல சொன்னார்
பார்போற்ற போய் சேர்ந்தார்...
எத்தனை புத்தகங்கள்...
எவ்வளவு மேடைகள்...
பாராளுமன்ற படையெடுப்பு...
போப் ஆண்டவருக்கு மொழி பெயர்ப்பு...
இப்படி
திக்கெட்டும் தமிழ் முழங்கிய 
வலம்புரி சங்குக்கு...
தலை வணங்கி நாம் சொல்வோம்
தமிழ் வணக்கம் இன்று...