Wednesday 23 February 2011

தவம்...

விடியல் வரும் முன்னமே
விழித்திடுவாள்...
சேவலது கூவும்போது;
சாணி கரைத்து போட்டிருப்பாள்...
சிலிர்க்கவைக்கும் குளிரிலும் 
சிக்கு கோலம் போட்டிடுவாள்...
சாணத்தை நடுவே வைத்து;
பரங்கிப்பூ மேலே வைத்து - அவள் 
கோலத்தை அலங்கரிக்கும் அழகை...
எக்கவியாலும்
எடுத்துரைக்க இயலாது...
நல்லெண்ணெய் விரலில் தடவி
நயமாய் அவள் கறக்க...
கன்றை மறந்த பசு;
கண் கொட்ட பார்த்திடுமே...
பசுவிடம் பேசிக்கொண்டே;
கன்றை அவிழ்த்துவிடும்...
தூயவளின் தாய்மை கண்டு;  
தூவும் பனி விலகிடுமே...
அதிகாலை தொடங்கி
அர்த்த ராத்திரி வரையில்...
அத்தனை வேலையையும் 
அலட்டாமல் முடிப்பதைக் கண்டு !
அரண்டு போய் பார்க்கும்; 
அறையில் உள்ள கடிகாரம்...
ஒரே ஒரு பொழுதுபோக்கு
தொலைக்காட்சி நாடகங்கள்!!!
தொல்லை கொடுக்க;
பிள்ளைகள் வந்தால்?
தொலைந்துவிடும் அவைகளும்...
எத்தனை இடர் வந்தாலும்?
அத்துணைக்கும் அவளது பதில்
மௌனமே.............
அமைதியான ஓருயிர் 
அவனியில் உண்டென்றால்...
அது தாயன்றி வேறேது?
அந்த தாயன்பிற்க்கீடேது?
வயிற்றில் உதைத்த போதே
வாய்மூடி ரசித்தவள்...
சின்ன சின்ன விஷயத்துக்கா
சினம் கொண்டு சீரிடுவாள்?
ஆதியும் அவளே...
அண்டமும் அவளே...
துவண்டு விழுகையில் எனைத்
தாங்கும் பூமியும் அவளே...
இம்மானுடன் மோட்சம் பெற
ஓர் வரம் தந்திடடி...
மீண்டும் ஒரு பிறவி கொண்டால்?
என் மகளாக பிறந்திடடி...
உத்தமியே உந்தன் கால்கள் - இந்த
பித்தனையும் உதைக்கட்டுமே!!!
பண்ணிய பாவம் யாவும்
என்னை விட்டகலட்டுமே!!!

- பத்மா சுவாமிநாதன்.

No comments:

Post a Comment