Tuesday 1 February 2011

இது உங்கள் சொத்து...

தினமும்
என்னை நம்பி - பெருந் 
திரளானோர்
வருவதுண்டு...

எனக்காக
கால்கடுக்க
காத்திருக்கும்
கூட்டமுண்டு...

தாய்பால்
குடிக்கும்
குழந்தையும்
வருவர்...

வாழ்கை
வெறுத்த
வயோதிகரும்
வருவர்...

கட்டிளம்
காளையரும்
கட்டழகு
பெண்டீரும்...

என்னுள்
வந்துவிட்டால்
காதல் செய்வர்
கண்களாலே...

பள்ளிக்கூடம்
போவோரும்
கல்லூரி
செல்வோரும்...

என்னை
நம்பி ஏறும்போது
இனம்புரியா
மகிழ்ச்சி எனக்குள்...

எத்தனையோ
சம்பவங்கள்
என்னுள்
அரங்கேற்றம்...

புத்துயிரும்
பிறந்திருக்கு
கத்திமுனையும்
பேசியிருக்கு...

இறப்பு;
பிறப்பு;
இவையெல்லாம்
எனக்கு சகஜம்...

எதுவானாலும்
ஏற்றுகொள்வேன்
இயக்கத்தை
நிறுத்தமாட்டேன்...

பொக்கை, போரை
பாதை என்றாலும்!
போகவேண்டியது
என் கடமை...

மழைமட்டும்
வந்துவிட்டால்
என் பாடு
திண்டாட்டம்...

கட்டுமரமாய்
சென்றிடுவேன்
கறைக்கப்பால்
சேர்த்திடுவேன்...

இத்தனை பெரிய
இயந்திரத்தை
இருவர் மட்டுமே
இயக்கிடுவர்...

ஆயுத பூஜை
அன்றுமட்டும் - என்னை
அழகுபடுத்தி
பார்ப்பார்கள்...

ஆத்திரம்
வந்துவிட்டால் - அவ்வபோது 
அழவைத்தும்
பார்ப்பார்கள்...

யாரோ ஒருவர்
கைதானால் - முதலில்
உடைவது
என் முகம் தான்...

கோபம் இன்னும்
கொடிதானால் - என்னை 
கொளுத்தியே விடுவர்
கோமாளிகள்...

ஆம்!!!
தங்கள் சொத்தை
தாமே அழித்தால் - அவர்கள் 
கோமாளிகள் தானே...

வேறென்ன
சொல்வது - இந்த
வீணாய்ப்போன
மானுடரை...

No comments:

Post a Comment