Wednesday, 23 February 2011

தவம்...

விடியல் வரும் முன்னமே
விழித்திடுவாள்...
சேவலது கூவும்போது;
சாணி கரைத்து போட்டிருப்பாள்...
சிலிர்க்கவைக்கும் குளிரிலும் 
சிக்கு கோலம் போட்டிடுவாள்...
சாணத்தை நடுவே வைத்து;
பரங்கிப்பூ மேலே வைத்து - அவள் 
கோலத்தை அலங்கரிக்கும் அழகை...
எக்கவியாலும்
எடுத்துரைக்க இயலாது...
நல்லெண்ணெய் விரலில் தடவி
நயமாய் அவள் கறக்க...
கன்றை மறந்த பசு;
கண் கொட்ட பார்த்திடுமே...
பசுவிடம் பேசிக்கொண்டே;
கன்றை அவிழ்த்துவிடும்...
தூயவளின் தாய்மை கண்டு;  
தூவும் பனி விலகிடுமே...
அதிகாலை தொடங்கி
அர்த்த ராத்திரி வரையில்...
அத்தனை வேலையையும் 
அலட்டாமல் முடிப்பதைக் கண்டு !
அரண்டு போய் பார்க்கும்; 
அறையில் உள்ள கடிகாரம்...
ஒரே ஒரு பொழுதுபோக்கு
தொலைக்காட்சி நாடகங்கள்!!!
தொல்லை கொடுக்க;
பிள்ளைகள் வந்தால்?
தொலைந்துவிடும் அவைகளும்...
எத்தனை இடர் வந்தாலும்?
அத்துணைக்கும் அவளது பதில்
மௌனமே.............
அமைதியான ஓருயிர் 
அவனியில் உண்டென்றால்...
அது தாயன்றி வேறேது?
அந்த தாயன்பிற்க்கீடேது?
வயிற்றில் உதைத்த போதே
வாய்மூடி ரசித்தவள்...
சின்ன சின்ன விஷயத்துக்கா
சினம் கொண்டு சீரிடுவாள்?
ஆதியும் அவளே...
அண்டமும் அவளே...
துவண்டு விழுகையில் எனைத்
தாங்கும் பூமியும் அவளே...
இம்மானுடன் மோட்சம் பெற
ஓர் வரம் தந்திடடி...
மீண்டும் ஒரு பிறவி கொண்டால்?
என் மகளாக பிறந்திடடி...
உத்தமியே உந்தன் கால்கள் - இந்த
பித்தனையும் உதைக்கட்டுமே!!!
பண்ணிய பாவம் யாவும்
என்னை விட்டகலட்டுமே!!!

- பத்மா சுவாமிநாதன்.

Monday, 21 February 2011

கிறுக்குப்பய கனவு...

எங்கள் நீண்டநாள் கனவை
போலவே...
எங்களுக்கு பிறந்தது
இரட்டை குழந்தை...
மகன் பெயர் ரிஷிகேஷ்
என் சாயலில் இருப்பான்...
மகள் பெயர் வசுமதி
என் மனைவியை போல...
எல்லா தகப்பனைப்
போலவும்!
எனக்கும் மகளையே பிடிக்கும்...
என்னைப் போல
இருப்பதினால் - என்
மனைவிக்கு மகனையே
பிடிக்கும்...
அவர்கள் அமைதியாய்
அமர்ந்திருந்தாலும்?
அவர்கள் பெயரைச்சொல்லி
நாங்கள் அடித்துக்கொள்வோம்...
நேற்றும் அப்படித்தான்...
ரிஷி வைத்திருந்த
பொம்மையை வசுமதி
பிடிங்கிக்கொண்டாள்...
அவ்வளவுதான்
வீடே ரெண்டு பட்டது...
அழவேண்டிய மகனோ
அமைதியாகத்தான் இருந்தான்...
அருகிலிரிந்த மனைவியோ
அடக்க முடியாத அழுகையோடு
அடியும் தந்தாள் - வசுமதிக்கு...
இரவு பத்து மணி...
இருவரையும் தூங்கவைத்து விட்டு - நான்
இருக்கும் கட்டிலுக்கு
வந்து சேர்ந்தாள் என் மனைவி...
ஏன் இத்தனை கோபம்?
என நான் கேட்க...
மடை திறந்த வெள்ளம்போல
கண்ணீரை கொட்டிக்கொண்டே
காரணத்தையும் சொன்னாள்.....................
வசுமதி வரவுக்குப்பின்
என்னை முழுவதுமாய்
மறந்துவிட்டாய்...
எப்போதுமே நீதான்
எனக்கு எல்லாமே என்றாயே...
மகளை பார்த்ததும் மாறிவிட்டாயே?
கொஞ்சலும்; கெஞ்சலும்...
உன் நெஞ்சின் கதகதப்பும்...
வேண்டி நான் நிற்கையில்!
அவளை மட்டுமே
அரவணைத்தால்?
கோபம் வராமல்
வேறென்ன வருமென்றாள்?
மாசற்ற அவளன்பில்
மனமுருகி நினைத்துக்கொண்டேன்...
அட கிறுக்குப் பயபுள்ள...
உன்னை மாதிரி
இருக்குறதால...
நீயும் இப்படித்தான்
இருதிருப்பியோன்னு...
அவளை ஆசையா தழுவுறேன்...
மூச்சுக்கு மூச்சு
முத்தமிடுறேன்...
இன்னைக்கு மட்டுமில்ல
என்னைக்குமே நீதான்
என் முதல் குழந்தைன்னு...
சொல்ல வேண்டிய வார்த்தைகள;
சொல்ல முடியாம...
ரெண்டு சொட்டு கண்ணீர
அவ கன்னத்துல உதிர்க்கும்போது...
டக்... டக்... டக்...
யாரோ கதவ தட்டுறாங்க...
கதவை திறக்கையில்
கேபிள் டிவி காரர்...
சார் நூறு ரூபா தரனும்...

- பத்மா சுவாமிநாதன்.

Thursday, 17 February 2011

Lets the hell out of here...

விண்ணை முட்டுது
விலைவாசி உயர்வு...
கண்ணை கட்டுது
கயவர்களின் ஊழல்கள்...
கழுத்தை நெரிக்குது
கரைவேட்டி அரசியல்...
நெஞ்சை அடைக்குது
நீதிமன்ற தீர்ப்புகள்...
உயிரே போகுது - எங்கள்
உரிமையை பறிக்கையில்...
இரத்தம் கொதிக்குது - எங்கள்
இரத்த சொந்தம் தவிக்கையில்...
கட்டுமரமேருது மானம் - தமிழன்
சுட்ட பிணமாய் வருகையில்...
ஆற்றுனா துயர் கொண்டோம்...
ஆண்டவன் செயல் என்றோம்...
எகிப்தில் நடந்ததே 
இங்கு எப்போது?
கையாலாகாத கயவனாய்
ஆனேனே...
புலம்பி தீர்க்கும் - நடைப் 
பிணமாய் போனேனே...
கடவுளோ; இயற்கையோ?
அநியாயம் தலைவிரித்தாடும் பொது...
அமைதியாகத்தானே இருக்கிறது...
பிறகெதற்கு இவைகளெல்லாம்?
பொய் சொல்லக்கூடாது...
புறம் பேச கூடாது...
களவம் கூடாது...
கடவுளை மறக்க கூடாது...
என சொல்லி
ஏன் என்னை வளர்க்கவேண்டும்?
பொய்,
பித்தலாட்டம்,
ஊழல் நிறைந்த உலகத்தில்
பீ தின்னும்
நாயாய் நான் வாழ்வதற்க்கா?

- பத்மா சுவாமிநாதன்

Monday, 14 February 2011

காதலர்கள் தோற்பதுண்டு - அனால் காதலென்றும் தோற்பதில்லை...


உன்னை போற்றாத
ஆளில்லை...
புகழாத பேரில்லை...
ஊற்றாக பெருக்கெடுத்து
நீ வரும்போது...
காற்றேது; கனலேது?
கரைபுரண்டு ஓடுமே;
காட்டாற்று வெள்ளம்போல...
கடவுள் மறுப்போரும் கூட - உன்னோடு 
கைகோர்த்து நடப்பாரே...
உன்னை நம்பித்தான்
இவ்வையமே வாழ்ந்திடுதோ?
உன்னை சுற்றித்தான்
இவ்வுலகமே சுற்றிடுதோ?
வள்ளுவன் தொடங்கி
வடநாட்டு புலவன் வரை...
எத்துனை பேர் உனக்கு
வெண்சாமரம் வீசினரோ?
பெற்றவர் தொடங்கி
உற்ற மாமன் வரை
எத்துனை பேர் உன்னை
வாய்விட்டு ஏசினரோ?
போற்றினாலும் தூற்றினாலும்...
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்...
புத்தம்புது பூவாய்
பூக்கும் உன் புன்சிரிப்பில்...
எத்தனை அழகு...
மொழிகடந்து இனம்கடந்து...
முழுமை நீ அடைந்த பின்னும்...
இளமை மாறாலும்
இன்னும் நீ 
இருப்பது எப்படியோ?
உனக்காக ஒருநாள்;
உலகமே கொண்டாடும்...
உன் பெயரை சொல்லி;
உணர்வுகள் திண்டாடும்...
வாழ்த்துக்கும்;
மகிழ்வுக்கும்;
உயிர்தந்த உன்னை
வாழ்த்த ஆளில்லை என்பதனால்?
என் வாழ்த்து...
"வாழ்க நீ பல்லாண்டு..
 பல்லாயிரத்தாண்டு...
பலகோடி நூற்றாண்டு..."

Saturday, 12 February 2011

ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்...


அப்பநென்பார்... 
அம்மையென்பார்...
சுற்றமென்பார்...
நட்பென்பார்...
நெருப்பென்பார்...
நீரென்பார்...
பஞ்ச பூதம் சாட்சியென்பார்...
அம்மி மிதித்திடுவார்...
அருந்ததியும் பார்த்திடுவார்...
காலநேரம் கழித்துக்கூட்டி; 
காமத்துக்கும் நாட்க்குறிப்பார்...
மாமியார் விடென்பார்...
மாமனார் சீரென்பார்...
மாப்பிள்ளை விருந்தென்பார்...
மைத்துனன் பரிசென்பார்...
கொழுந்தியாக் குசும்பென்பார்...
தாம்பத்திய உறவென்பார்...
பொண்டாட்டியே போதுமென்பார்...
பிள்ளைகுட்டி பெற்றிடுவார்...
இத்தனையும் கடந்த பின்னே;
இட்லி மாவு பிரச்சனைக்கு...
இனி அவள் வேண்டாமென
நீதிமன்றம் சென்றிடுவார்...
வெக்கமில்லா மனிதர்கள் பாரீர்...
உறவுகளை வெட்ட துடிக்கும்
விலங்குகள் பாரீர்...
விவாகரத்து எதற்கு?
இருமனங்கள் இணைந்துவிட்டால்
எந்த சட்டம் கேள்வி கேட்கும்?
உன்னோடு சகலமும்
பகிர்ந்துகொண்ட ஒருத்தியை பற்றி...
எவனிடமோ சொல்கிறாயே?
உன்னை சொல்லி திட்டுவது?
அல்லது விவாகரத்து சரிதானா?
 

Friday, 11 February 2011

Royal salute...

நல்ல படம் பார்த்து
நீண்ட நாள் ஆகுதுன்னு
பொலம்பிகிட்டே போனேன்
ஒரு படத்துக்கு.
ஓபனிங் சாங்... 
டபுள் மீனிங் வசனம்...
குத்து பாட்டு என...
வழக்கமான தர்க்கத்தை விட்டு
சற்று தள்ளி வந்து
புது அர்த்தத்தை சொல்லி சென்றது...
இயக்குனர் பூர்வ ஜென்மத்தில்
தலைசிறந்த சிற்பியாகவே
இருந்திருக்க வேண்டும்...
காரணம் அவர் செதுக்கியிருந்த
கதாப்பாத்திரங்களின் பங்களிப்பு
என்னை அவ்வாறு நினைக்க தூண்டுகிறது...
ஒவ்வொரு பாத்திரமும்
அதன் தன்மைக்கேற்றவாறு
பிரதிபலித்திருக்கிறது...
பாடலே இல்லாத திரைப்படம்...
வக்கிரம் காட்டாத திரைக்கதை...
இரண்டரை மணிநேரம் ஒரே இடத்தில்
இருந்ததே தெரியவில்லை...
அற்புதமான படைப்பு...
இதற்குமுன் இயக்குனர்
பயணித்த பாதையிலிருந்து
புதிய பரிமாணத்தில் பயணிக்கிறார்...
என்னை பொறுத்தவரை
2011-ன் அனைத்து விருதுகளுக்கும்
தகுதியான படமாக இதை எடுத்துக்கொள்ளலாம்...
தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய
"பயணம்..."
திரு.இராதா மோகன் அவர்களுக்கும்
இப்பட குழுவிற்கும் ஒரு சல்யூட்...

Wednesday, 2 February 2011

கதைகதையாம்... காரணமாம்...

மக்கள் முகத்தில்
மட்டற்ற மகிழ்ச்சி...
எதிர்கட்சி ஆட்களுக்கு 
ஏகத்துக்கும் குளிர்ச்சி...

அனைத்திற்கும் காரணம்
ஆ.ராசா கைது...
அருமையான நாடகம்
அற்புதமான திரைக்கதை...

இது கலைஞரின்
எழுபத்தி ஆறாம் படைப்பு...
இளைஞனுக்கடுத்து
இவரின் முனைப்பு...

இத்தனை நாள்
கழித்து
ஏன் இந்த
நாடகம்?

சிந்தித்து 
பார்த்தேன்
சிரிப்புதான்
வருகிறது...

சி.பி.ஐ அதிரடியாம்...
தி.மு.க தடாலடியாம்...
அடப்பாவிகளா
சின்னப்புள்ள தனமா இல்ல?

இது தேர்தல்
வரும் காலம்...
இனி தென் சொட்ட
கதைகளும் வரும்...

கதைகளை ரசிக்க
கற்றுக்கொள்ளுங்கள்...
கன நேரமும் நம்பிவிடாதீர் - இந்த
கிழப்பயலை...

நம்பும்படி
கதை சொல்வான்...
நயவஞ்சக
நரிபோல...

நம்பியவர்
கழுத்தறுப்பான்
நயமாய்
பேசிக்கொண்டே...

மறந்தும்
நம்பிவிடாதீர் - இவன் 
மயக்கும்
வித்தைக்காரன்...

Tuesday, 1 February 2011

அஸ்தமனம்...

கதை சொல்வதில்
தமிழனுக்கு நிகர்
தமிழனே...
காரணம்?
அவர்கள்
கதை சொல்லும் விதமே...
புராணம் என்றாலும்
வரலாறு என்றாலும்
கூடியிருக்கும் கூட்டத்தை
தன் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்...
அப்படி ஊரே
ஒன்றுகூடி ரசித்த
ஒரு கலைதான்...
வில்லுப்பாட்டு.
போர்களத்தில்
உயிரை பறிப்பதற்கு
பயன்படுத்திய வில்தான்
முதன்மை வாத்தியம்...
அடுத்தது உடுக்கை,
கடம் என புடைசூழ...
நாட்டுப்புற பாடல்களால்
சொல்லப்பட்ட
கதா காலட்சேபம்...
"தந்தனத்தோம் என்று சொல்லியே...
வில்லினில் பாட...
ஆமா...
வில்லினில் பாட...
வந்தருள்வாய் கணபதியே...."
இறைவனக்கதொடு
பாடல் தொடங்கும்...
இடையில் அவ்வபோது
ஒரு குரல் வரும்...
ஆமா, அப்படியா,
ம்ம்ம்ம் - இவையெல்லாம்
அவையோரின் பிரதிபளிப்பு
என்றே தோன்றும்....
பாட்டோடு கதை வரும்...
கதையின் நடுவே பாட்டு வரும்...
கதை சொல்பவரே
கதாநாயகன்...
வந்திருக்கும் அனைவருக்கும்
வணக்கம் சொல்லி
வரவேர்ப்பார்...
கதை சொல்லி
முடிக்கும் வரை
அணுவும் அசையாது...
எப்போதோ பார்த்த
ஞாபகம்...
இப்போதும் பசுமையாய்...
எப்போதாவது நிகழ்சிக்கு
தொலைகாட்சிகள்
இவர்களை அழைப்பார்கள்...
இப்போது அதுவும்
முடிவுக்கு வந்தது...
விடுமறை நாளென்றால் போதும்
வந்துவிடும் ஒரு குரல்...
"இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாக...
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...
புத்தம் புதிய திரைப்படம்...
காணத்தவறாதீர்கள்..."

அவ்வளவுதான் பிறகெப்படி
இக்கலை வளரும்...
மேடை நாடகங்கள்,
பொம்மலாட்டம் போல்
குறைந்து வரும் கலைகளில்
வில்லுப்பாட்டும் ஒன்று...
தமிழ் பண்பாடு,
கலாச்சாரங்களைக் காப்போர்
இதையும் கண்டுகொண்டால்...
மகிழ்ச்சி....

-பத்மா சுவாமிநாதன்

இது உங்கள் சொத்து...

தினமும்
என்னை நம்பி - பெருந் 
திரளானோர்
வருவதுண்டு...

எனக்காக
கால்கடுக்க
காத்திருக்கும்
கூட்டமுண்டு...

தாய்பால்
குடிக்கும்
குழந்தையும்
வருவர்...

வாழ்கை
வெறுத்த
வயோதிகரும்
வருவர்...

கட்டிளம்
காளையரும்
கட்டழகு
பெண்டீரும்...

என்னுள்
வந்துவிட்டால்
காதல் செய்வர்
கண்களாலே...

பள்ளிக்கூடம்
போவோரும்
கல்லூரி
செல்வோரும்...

என்னை
நம்பி ஏறும்போது
இனம்புரியா
மகிழ்ச்சி எனக்குள்...

எத்தனையோ
சம்பவங்கள்
என்னுள்
அரங்கேற்றம்...

புத்துயிரும்
பிறந்திருக்கு
கத்திமுனையும்
பேசியிருக்கு...

இறப்பு;
பிறப்பு;
இவையெல்லாம்
எனக்கு சகஜம்...

எதுவானாலும்
ஏற்றுகொள்வேன்
இயக்கத்தை
நிறுத்தமாட்டேன்...

பொக்கை, போரை
பாதை என்றாலும்!
போகவேண்டியது
என் கடமை...

மழைமட்டும்
வந்துவிட்டால்
என் பாடு
திண்டாட்டம்...

கட்டுமரமாய்
சென்றிடுவேன்
கறைக்கப்பால்
சேர்த்திடுவேன்...

இத்தனை பெரிய
இயந்திரத்தை
இருவர் மட்டுமே
இயக்கிடுவர்...

ஆயுத பூஜை
அன்றுமட்டும் - என்னை
அழகுபடுத்தி
பார்ப்பார்கள்...

ஆத்திரம்
வந்துவிட்டால் - அவ்வபோது 
அழவைத்தும்
பார்ப்பார்கள்...

யாரோ ஒருவர்
கைதானால் - முதலில்
உடைவது
என் முகம் தான்...

கோபம் இன்னும்
கொடிதானால் - என்னை 
கொளுத்தியே விடுவர்
கோமாளிகள்...

ஆம்!!!
தங்கள் சொத்தை
தாமே அழித்தால் - அவர்கள் 
கோமாளிகள் தானே...

வேறென்ன
சொல்வது - இந்த
வீணாய்ப்போன
மானுடரை...