Sunday, 27 March 2011

கடமையை செய்வோம்... உரிமையை கேட்போம்...


எத்தனை மொழிகளில்
வரையறை தந்தாலும்...
மக்களாட்சிக்கு தமிழ் தந்த
பெயர் குடியரசு...

...இங்கு எவரேனும்
ஒருவர் சொல்லட்டும்

"மக்களால் மக்களுக்காக மக்களே"
செய்யும் ஆட்சி...
இங்கு நடக்கிறதா?

அவரவர் மக்களுக்காக
அவரவர் மக்களால்
அவரவர் மக்களே செய்யும் ஆட்சி...
நடைமுறையா?

சாமானியனுக்கு அரசியல்
என்பது ராகேட் சைன்ஸ் ஆகிப்போனதே...
அதற்க்கு யார் காரணம்?

கொலை செய்தவனும்
கொள்ளை அடிப்பவனும்
இந்த நாட்டை ஆள்வதுதான்
நாகரீகமா?

இளைஞர்கள் இங்கு வந்தால்
இந்தியா ஒளிரும் என்கிறீரே!!!
புது ரத்தத்திலும் - உங்கள் எண்ணம்
புரையோடி போவதற்கா?

பல்லாயிரம் கோடி
கடன்வாங்கித்தான் என் நாட்டை
வல்லரசாக்கனுமா?
வட்டிக்கு கடன்
வாங்கி - நம் தாய்க்கு
பட்டுப்புடவை கட்டனுமா?

இனியாவது தவிர்த்திடுவோம்
இது போன்ற இலவசத்தை...
இலவசங்கள் அல்ல - அவை
நம் கழுத்துக்கு நாமே போடும்
சுருக்கு கயிறு...
நம் நாட்டுக்கு நாமே தோண்டும்
ஆழ் கிணறு....
புதையுண்டால்
பிழைக்க வாய்ப்பில்லை...

அடுத்த ஐந்தாண்டுக்கு...
நம்மை ஆளப்போகும்
ஒரு சபையை;
நாட்டின் தலை எழுத்தை மாற்றப்போகும்
ஒரு அரசை தீர்மானிக்க...

இதுவே நேரம்
சிந்தித்து செயல் படுவோம்...
வாக்களிப்பது நமது உரிமை...
வாக்களிப்பது நமது கடமை....
49 - O என்பதும் ஓட்டுதான்...


Sunday, 20 March 2011

யதா யதா ஹி தர்மஸ்ய.....


அநியாயங்கள்
அரங்கேறும் போதெல்லாம்
அழையா விருந்தாளியாக! 
அப்பொழுதே வந்திடுவார்...

எங்கோ நடக்கும்
கொள்ளையையும்;
கொலையையும்!
எங்கிருந்தோ வந்து தடுத்திடுவார்...

அதனையும்  மீறி
நடந்துவிட்டால்?
அன்னாரின் பழிவாங்கும் எண்ணம்
பலரது உயிர் வாங்கும்...

நாடி நரம்புகள்
புடைத்து; கோபம்
கழுத்து வழியாக
கபாலத்தை சென்றடையும்...

தீப்பிழம்பு
திரண்டு வந்து...
அவர் கண்களில் 
காட்சி தரும்...

இங்கு பிடிக்க
ஆளில்லாமல் - தீவிரவாதியை 
இங்கிலாந்து சென்று
பிடித்திடுவார்...

பக்கம் பக்கமாக
வீர வசனங்கள்...
அங்கொன்றும் இங்கொன்றுமாக
பஞ்ச் டயலாக்குகள்...

பாவம் செய்வோரை
பார்த்துவிட்டால் போதும்...
பின்னங்கால் பிடரியில் அடிக்க
விரட்டிடுவார்...

கடைசி மூச்சு உள்ளவரை...
கடமையை செய்திடுவார்...
காலன் அதற்குள் உயிர் பிரித்தால்?
மீண்டும் பிறந்து முடித்திடுவார்...

எத்தனை ஸ்டார்கள்...
எத்தனை தளபதிகள்...
எத்தனை நாயகன்கள்...
எத்தனை புயல்கள்...

வெள்ளித்திரையில் மட்டும்
வேங்கை முகம் காட்டுகின்றாரே?
இந்தியத் தாயின்
பிள்ளைகள் தவிக்கையில் இமயமலை  செல்கின்றாரோ?

அரிதாரம் பூசிக்கொண்டு 
அவதாரம் எடுக்கும்போதுதான்...
அவர்களுக்கு வீரமும்
தியாகமும் வரும் போல!!!

நடந்து முடிந்த
அக்கிரமங்களுக்கு பழிவாங்கவும்...
நடந்துகொண்டிருக்கும்
அத்தனை கொடுமைக்கும் விடை காணவும்...
நடக்கப் போகும்
அழிவுகளை தடுக்கவும்...
ஒரு நாயகனும் வருவதில்லை...

பொருள் ஈட்டவும் - தங்கள்
துதி பாடவும் மட்டும்; அவர்களுக்கு
தமிழன் வேண்டும்...
தமிழ்நாடு வேண்டும்...

தெளிவான கொள்கை...
உயர்ந்த நோக்கம்...

தமிழன் தன்னிலை
அறியும் வரை!
தொடரும் இவர்கள்
தெருக்கூத்து...

தெளிவோம்...
துணிவோம்...
தொடர்வோம்...

Monday, 14 March 2011

Miss you my friend...

நீண்ட நாட்களாக
நீங்காத சந்தேகமொன்று!!!
அண்மையில் தான்
அறிந்துகொண்டேன்...

நள்ளிரவு நேரமது
சர சரவென
சத்தம் கேட்கும்...
திடுதிப்பென
தூக்கம் களைந்து பார்த்தால்?
சத்தம் நின்றுவிடும்...

வீட்டில்
மீன் குழம்பு;
கருவாட்டுக்குழம்பு
சமைத்துவிட்டால்?
கேட்கவே வேண்டாம்...

வீட்டின் அருகில்
கேணி ஒன்று இருப்பதால்...
பேயாக இருக்கலாம்!
என்றனர் சிலர்...

என்னவாக இருந்தாலென்ன?
போதையில் இருப்பவனை
பேயென்ன செய்துவிடும்?
என்று நானும் விட்டுவிட்டேன்...

ஆனாலும் மனதுக்குள்
ஒரு தேடல்...
என்னவாக
இருக்குமென்று...

ஒரு நாள்
தென்பட்டது...
கையும் களவுமாய்
பிடிபட்டது...
பேயுமல்ல; பூதமுமல்ல!

சுதந்திரமாய்
சுற்றித்திரியும் - ஒரு
சுட்டிப்பூனை...
ஓர் அழகான
குட்டிப் பூனையென்று...
 
பிறகு நாங்கள்
நண்பர்களானோம்...
நள்ளிரவில் வரும் நண்பன்
நண்பகலிலும் வர ஆரம்பித்தான்...

கடந்த இரண்டு நாட்களாக
நண்பனை காணவில்லை...
ஏனென்று தெரியவுமில்லை!!!

குடும்பத்தை காண
சென்றிருப்பானோ?
காதலியை பார்க்க
போயிருப்பானோ?
என்றெல்லாம் யோசித்தேன்...

நேற்று மாலை
என் வீட்டின் அருகிலுள்ள
முருங்கை மரத்தடியில்
இறந்து கிடந்தான்!
என் நண்பன்...

என்ன நேர்ந்தது?
யாரிதை செய்தது?
எதுவும் புரியவில்லை...

காலங்காலமாக
செய்தது தானே?
புதிதாய் என்ன
செய்துவிட போகிறேன்?
வழக்கம் போல
பணிகளை தொடர்ந்தேன்...

கல்லாகி போச்சு மனசு...
கருங்கல்லை விட மோசமாய்...
எதற்குமே கலங்குவதில்லை...
இதற்க்கு பெயர் தான் சுயநலமா?

Wednesday, 9 March 2011

வேண்டுதல்...

காலையில் தான்
காமாட்சி வந்தாள்...
அவா கேட்டபடியே
ஆத்துக்காரன் அமைஞ்சாலும்
மாமியாரும், நாத்தனாரும்
கொடுமை பண்றாளாம்!!!

மதியம் தான் மனோகர் வந்தான்
இன்னும் அந்த படவாக்கு
வேலை கிடைக்கலையாம்!
கவர்மென்ட் வேளை தான் வேணுமாம்...

நேத்து தான் வந்துட்டு போனாள்
நேக்கு பூமாலை தொடுக்கும் நிவேதா...
கல்லூரி கட்டணம் செலுத்த
இன்றுதான் கடைசி நாளாம்...

செத்த நாழி முன்னாடிதான்
ஒரு காதல் ஜோடி வந்து
கயவாளித்தனம் பண்ணினது...

போதாதுன்னு கட்சி காரா
எல்லாம் வரா...
கூட்டணி அமையனுமாம்...
தேர்தலில் ஜெயிக்கனுமாம்...
மந்திரியா ஆகணுமாம்...
இப்படி எத்தனையோ 
வேண்டுதல்கள்...
விதவிதமா வழிபாடு பண்றா...

தெரு மூலைல
தேமேன்னு உக்காந்திருக்கேன்...
காக்கவும் குருவியும்;
என் தலைலதான்
கக்கா போயின்றுக்கு...
அதை யாரும்  
கண்டுக்க மாட்றா...

தினம் என் உண்டியல்ல
திருடன் காசையெல்லாம்
எடுத்துண்டு போறான்...
அவனாவது பரவால்ல
வயித்துக்காக திருடுறான்...

நான் பால் குடிக்கிறேன்னு சொல்லி
ஊருல உள்ள பாலையெல்லாம்
பிரம்மஹத்திகள்... 
என் மேல கொட்டுறா...

வேண்டுதல்ன்னு சொல்லிண்டு
மூட்டை மூட்டையா
தேங்காய் உடைக்கிறா...

இதையெல்லாம் யாருடா கேட்டா?
ரெண்டு வருஷமா நானும்
ஒரே வேட்டிய கண்ட்டிண்டு இருக்கேனே?
நாத்தம் மூக்கை அடைக்கிறது...
அதை யாராவது செத்த மாத்துங்கோளேன்...

Tuesday, 8 March 2011

பெண்மை போற்றுதலே ஆண்மை...

பூவினும் மென்மையும் 
பூமியினும் பொறுமையும்
கொண்ட பூவையரை...

அடக்குவதும்
முடக்குவதுமே 
ஆண்மை என்று...
ஆண்டுகள் பலநூறாய்
ஆண்டுவந்த ஆணினமே...

முன் பின் அறிமுகமில்லா!
முகவருக்கு வணக்கம் வைத்தோம்...
அலுவலக பனி நிமித்தம்
அனைவரையும் அனுசரித்தோம்...

சகலமும் நாமென
சகித்துக்கொள்ளும் ஒருத்தியை...
சக மனிஷியாக;
சமமாக நடத்துவதில்...
என்ன குற்றம் கண்டீர்?

பெண்ணவளை;
பூவென்றும் புகழ வேண்டாம்...
பூமியென்றும் போற்ற வேண்டாம்...
நண்பனாக நேசிப்போம்...
நாகரீகம் கர்ப்பிப்போம்...
வீடாள வந்தவளை;
நாடாள மாற்றிடுவோம்...

அடக்கியாள்வது
ஆண்மையாகாது...
பெண்ணடிமை தனமென்றும்
போற்றலாகாது...

கூண்டுகிளிகள் கூடு
தாண்டி செல்லட்டும்...
வேண்டுவன யாவும்
தாவியது வெல்லட்டும்...

பொத்திவைத்த உணர்வுகள் யாவும்
புத்துயிர் கொள்ளட்டும் - அவள்
பொக்கிஷமாய் அடக்கிவைத்த
புன்சிரிப்பு பொங்கட்டும்...

Saturday, 5 March 2011

கசடற கற்போம்...


Assault-ன்னா பத்தாயிரம்...
Murder-ன்னா ஒரு லட்சம்...
படிப்பறிவில்லா
ஒரு கூலிப்படையை சேர்ந்தவன்
பேசும் சரியான சொற்களை கூட?
...
பட்டதாரிகள்!
நம்மால் சரியாக பயன்படுத்த முடியவில்லை...
கடுமையாக தாக்குதல் என்ற அர்த்தம் கொண்ட
அசால்ட் என்ற சொல்லை;
நாம் எப்படி பயன்படுத்துகிறோம் தெரியுமா?
..........................................................................................
காலைலேர்ந்து காட்டு கத்து கத்துறேன்.
நீ அசால்ட்டா உக்காந்திருக்க... என்று
பல பெற்றோர்கள் சொல்வதை நம் காதுகள்
பலமுறை கேட்டிருக்கும்...

இதை உன்னால் செய்ய முடியுமா?
என்ற கேள்விக்கு...
மச்சி இதெல்லாம் அசால்ட்டுடா...
என்பதையும் பார்த்திருக்கிறோம்...

ஒரு வார்த்தையின் அர்த்தத்தை
தலைகீழாய் மாற்றுவது
எங்ஙனம் சரி?

தவறு!
பிறமொழி பேசுவதில் இல்லை...
அதை தவறாக பேசுவதில் உள்ளது...

எம்மொழி கற்றாலும்
கசடற கற்ப்போம்...
அம்மொழி இலக்கணங்கள்
மாறாமல் நிற்போம்...

Friday, 4 March 2011

22/1 ஆண்டவர் நகர், 3 ம் தெரு, கோடம்பாக்கம்.

மகிழ்ச்சியின் முகவரி
யாதெனக்கேட்டால்?
மனமார சொல்வேன்
இதுதானென்று...

ஆம்!
மகிழ்ச்சியின்
மற்றொரு பரிமாணத்தை
எங்களுக்கு சொல்லித்தந்தது
அந்த வீடு...

அங்ஙனம் உண்டு
உடுத்தி, உறங்கி,
உழன்றதனால் வீடென்றே
எழுதளுற்றேன்...

உண்மையில் வீடல்ல அது...
சிகரமேற நினைத்து;
தன் கூடுவிட்டு பறந்து வந்த;
சிட்டுக்குருவிகளின் பட்டுக்கூடாரம்...

வாழ்வின் இலக்கணத்தை
வாரித்தந்த போதிமரம்...
சின்னச் சின்ன அறைகள் கொண்ட
செட்டியார் பில்டிங்...

வண்ண வண்ண
கனவுகளோடு வாழ்வு தேடிய...
இயக்குனர்கட்க்கு!!!
அள்ள அள்ள கதைகள் தந்த
கலைக்களஞ்சியம்...

இயக்குனர் சேரனும்
இன்னபிற ஆட்களும்
இங்குதான் வாழ்ந்ததாக
கேள்வி...

பிரம்மச்சாரி விடுதியின்
அத்தனை சாராம்சமும்
சற்றும் குறையாமல் இருக்கும்...

இளைப்பாறவும்...
இமை மூடவும்...
இன்றுவரை அமையவில்லை
இதுபோன்றொரு இருப்பிடம்.

கொளுத்தும் கோடையும்;
குளுமையே எங்களுக்கு.
கொட்டிக்கிடக்குது ஞாபகங்கள் - கொள்ளை
அடிக்கமுடியா பொக்கிஷங்கள்...

ஒவ்வொரு நிகழ்வும்,
ஒவ்வொரு அனுபவம்...
நினைத்துப்பார்த்தால்?
நெஞ்சுக்குள் பூமழை...
நெகிழ்ச்சி மிகுதியால்?
கண்ணுக்குள் ஓர் அலை...

கையில் பணமிருக்காது - ஆனாலும் 
புன்னகைக்கு குறைவிருக்காது...

நான்கு ருபாய்
அன்றிருந்தால்?
இரண்டு கட்டு பீடியோடு
தொடரும் எங்கள் ராக்கூத்து...
விடிய விடிய சீட்டாட்டம்...
வீட்டுக்குள் மேகமூட்டம்...

காதல் கதைகளும்
மாண்டதுண்டு!!!
காமன் கணைகளும்
பாய்ந்ததுண்டு!!!

எனது இறுதி மூச்சும் சொல்லும்
நன்றிகள் கோடி...
கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்காத நண்பர்களை தந்ததற்கு!!!

வரலாறு படைத்த கட்டிடம்
தரைமட்டமாக்கப்பட்டு;
ஐந்தாண்டுகள் ஆகிறது...
புதுக்  கட்டிடமாக
பிரவியொன்றை எடுக்கிறது.
புதிய வரலாறு எழுத...

- பத்மா சுவாமிநாதன்