Saturday, 4 August 2012

...தரிசு நிலம்...

ஏழு வருசமாச்சே;
இந்த வெறுஞ்சிறுக்கி
வயித்துல - ஒரு
புழு பூச்சி உண்டாச்சா?

தன் வயதொத்த
தோழியிடம்
அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்;
தங்கையனின் தாய்
அங்கம்மாள்...

ஆம்...
தங்கையனுக்கு
திருமணமாகி;
புரட்டாசி வந்தால்
வருடம் எட்டு!

புத்திர சோகத்தில்
நித்திரையின்றி
நித்தம் தவித்த 
தங்கையன் ரெத்தினம் 
தம்பதியினர்;

சுற்றாத மரமோ
செல்லாத கோயிலோ
வேண்டாத கடவுளோ
இல்லையென்றே
சொல்லவேண்டும்!

குறுவைக்குக்
காத்திருக்கும்
கழனியைப்போல;
குறுக்கும்
நெடுக்குமாய் வெடித்த
வயல்வேளியாகவே
வாழ்க்கையும் ஆனது...

வானம் பார்த்த
பூமிக்கு சொந்தக்காரன்;
வக்கற்றிருப்பது
வழக்கம் தானே?

குழந்தையுமில்லை
குறுவையு மில்லாததால்
இவ்வருடம்
மகிழ்ச்சியுமில்லை
மகசூலுமில்லை - அந்த
மாட்டுக்காரப் பயலுக்கு...

பாலைக்கொண்டு
பிழைப்பு நடத்திய
பாவப்பட்டவனைக் கண்டு
மாரியாத்தாள்
மனமிறங்கினாள் போலும்!

எலிவெட்டுக்காக
எடக்குமுடக்காக
துண்டாடப்பட்டிருக்கும்
வரப்பையும் - தன்
வாழ்க்கையையும்;
ஒப்பிட்டுப் பார்த்தபடியே
ஓலைக்குடிசை நோக்கி
ஓங்கி நடந்தான்...

வாசலில்
வெற்றிலை
குதப்பிக்கொண்டிருந்த
அங்கம்மாளைப் பார்த்ததும்
வந்தவேகம் பாதியாய்
குறைந்தது...

பாவம்;
குடிசையில்
காத்திருக்கும் செய்தியை - அந்தக் 
காட்டுப்பயல் அறிந்திருக்கவில்லை...
(தழைக்கும்...)

Monday, 30 July 2012

...மறுக்கப்பட்ட நீதி...

இரக்கமென்ற
பொருளற்றவன்...

இங்கே
இராமனாக
வணங்கப்படுவான்!

ஈசனாக
பூஜிக்கப்படுவான்!

நாயனாராய்
நமஸ்கரிக்கப்படுவான்!

கண்ணனாகக்
கொண்டாடப்படுவான்!

ஆச்சாரியராக
அறியப்படுவான்!

முனிவராகப்
போற்றப்படுவான்!

க்ஷத்ரியனாக
சேவிக்கப்படுவான்!

தேவர்களாகத்
தொழப்படுவார்!

அதுவே
தமிழனாய் இருந்தால்?
தீர்மானமாய்
தண்டிக்கப்படுவான்!!

தவம் புரிந்த சம்புகனின்
தலையெடுத்த!
கொலையாளி இராமன்
தெய்வமானான்...

பசியாறிய குற்றத்திற்காக
பலநூறு பேரோடு;
பச்சிளங் குழந்தையை
இரண்டாய்ப் பிளந்த!
கொடூரன் கோட்புலி நாயனார்
சேக்கிழாரானான்...

தலைப்பிள்ளை கறிகேட்ட!
தறிகெட்ட சிவனடியார்
சிறுத்தொண்டரானான்...

குருதட்சணையாய்(?!)
கட்டைவிரலை கேட்ட
கேடுகெட்ட துரோணர்
ஆச்சாரியரானான்...

பெற்றெடுத்த தாயின்
தலையை கத்தரித்த!
கொடிய பரசுராமன்
க்ஷத்ரியனானான்...

அறவே இரக்கமின்றி
அரிச்சந்திரனை ஆட்டிவைத்த
வன்னெஞ்சன் விசுவாமித்திரன்
முனிவரானான்...

தர்மத்தின் பெயரால்!
இவற்றையெல்லாம்
ஞாயப்படுத்திய இவ்வுலகம்...
தமிழனுக்கு மட்டுமே(?)
தண்டனை தந்ததில்
ஆசுவாசம் அடைந்துகொள்கிறது!

வீரன்,
தவசி,
கலைஞன்,
தமிழன் இராவணன் - இறுதியில்
தமிழரிடமே அரக்கனானான்!!

நீதி
முக்காலமும் - எமக்கு
மறுக்கப்படுவது
எங்கனம் ஞாயம்?

ஆரியத்தின்
அ(த்)தர்மத்தை - சற்று
தள்ளியே வையுங்கள்...
- பத்மா சுவாமிநாதன்
...கேள்வி...

வழக்கமான
அலுவல்கள் முடித்து;
வாடிக்கையான - அந்த
கடையில் தேநீர் அருந்தி...

திருமங்கலம்
தாண்டியதும்
தடைபட்டது பயணம்...

வாகனத்தின்
விசை நரம்பு(Accelerator Cable) - தன்
ஆயுட்காலம் முடிந்து
அறுந்தேபோனது...

நல்லவர்களை
சோதிக்கும் ஆண்டவன் - என்னை
தவறாகப் புரிந்துகொண்டார் போலும்!

அடுத்த
அரை மணிநேரத்தில்
எடுக்க ஆயத்தமானது வண்டி!
இயந்திரக் கைவினைஞர் (Mechanic)
அய்யனார் தயவால்...

வீறுகொண்டு
கிளம்பிய - எந்தன் வாகனம்;
மீண்டும் நிறுத்தப்பட்டது
திருமுல்லைவாயல்
அருகே...

சட்டம் ஒழுங்கு
காவலர்கள்!
தம் பணியை(?)
செவ்வனே
செய்துகொண்டிருந்தனர்...

மரியாதை நிமித்தம்
கீழிறங்கி;
ஓட்டுனர் உரிமம்
பதிவுச் சான்றிதழ்
காண்பிக்கப்பட்டன...

வேலைசெய்யுமிடம்
வீட்டின் முகவரி யாவும்
கோரப்பட்டதின் பேரில்
கொடுக்கப்பட்டன...

நான் சார்ந்த
நிறுவனத்தையும்
பதவியையும் கேட்டுக்கொண்டவர்
மரியாதையாகவே வினவினார்
அது என்ன சார்
"ஸ்டாப் டெத் பெனால்டி" என்று?
(வண்டியில் எழுதியிருக்கும் வாசகம்)

மரண தண்டனைக்கெதிரான
மக்கள் இயக்கத்தைப்பற்றியும்
அதன் மீதான எனது
கருத்தையும் சொன்னேன்...

நேரம் நீ...................ண்டது
வசூலுக்கு இடையூறாக
இருந்த என்னை;
உசாராகவே அனுப்ப முயன்றார்
அந்த ஆண் காவலர்...

உடனிருந்த
பெண் காவலர்
சொன்னதுதான்
சற்று அடடே ரகம்...

சாருக்கு சமூக சிந்தனை
ரொம்ப அதிகமோ?
என்றார்!

அது என்
உரிமை என்றேன்...
மறுபேச்சுக்கு வழியில்லை!

பொத்திக்கிட்டு
போறவன்தான்
பொதுஜனம்!
என்று நினைக்கிறார்களா?

அல்லது
சாமானியனுக்கு
சமூகம் பற்றிய சிந்தனை
ஏனென்று எண்ணுகிறார்களா?

என்னை
தூங்கவிடாத
கேள்வி?
- பத்மா சுவாமிநாதன்
...நீயும் நானும்...

புலிகளுக்காக
காப்புக்காடுகள் அமைத்து
பராமரிக்கும் - இதே
நாட்டில்தான்!

தற்கொலை
செய்துகொள்ளும்
விவசாயி...

பள்ளிசெல்லும் வயதில்
பாத்திரம் கழுவும்
சிறார்கள்...

கூட்டு
பலாத்காரத்திற்கு
பலியாகும் பெண்...

கள்ளக் காதலிக்காக
மனைவியைக் கொல்லும்
கணவன்...

ஓட்டுப்போட்டவனை
ஓட்டாண்டியாக்கும்
அரசியல்வாதி...

குடிமகனின்
குறைகேட்காத
அரசு...

எது நடந்தால்;
எனக்கென்ன எனும்
நீ, நான்...

- பத்மா சுவாமிநாதன்
...மற்றவை வழக்கம்போல்...

பிறரைப் போலவே
பிறந்தோம்...
வரையறுக்கப்பட்ட
வாழ்க்கை முறைப்படி
வளர்ந்தோம்...

வெற்றியென்ற - ஒற்றை
இலக்குநோக்கி
வெறித்தனமாய்
ஓடுகிறோம்...

பூங்குயில் ஓசையும்
பூவையர் வாஞ்சையும்
போகிற வழிதனில் - சற்றே
இளைப்பாற்ற...

மீண்டும்
ஓட்டமெடுக்கும்
இந்த நாய்பிழைப்பின்
நோக்கமென்ன;
பொதுநலன் சார்ந்தா
இருக்கப்போகிறது?

இனியொரு முறை
எப்படி இருக்கிறாயென
யாரும் கேட்டுவிடாதீர்!

சகமனிதர்கள் சாகும்போதும்
சுயநலமாய் சிந்தித்த - இந்த
சாமானியன் வாழ்வில்
சாதனைகளா நிகழ்ந்துவிடும்?

மற்றவை
என்றுமே;
வழக்கம் போல்...

உண்போம்
உடுத்துவோம்
உறங்குவோம்
மறவாமல்;
இனவிருத்தி செய்வோம்
அவ்வளவே...
- பத்மா சுவாமிநாதன்
...அப்பாக்கள் மாறுவதேயில்லை!...

எனக்கு
விளக்கம் தருகிற - உந்தன்
தோனியில் மட்டுமே
மாற்றமிருப்பதாய் உணர்கிறேன்...

"இப்ப உனக்கு இது புரியாதுப்பா"
எனும்போதே புரிகிறது;
உன் பிள்ளைமீதான
இச்சமூகத்தின் பார்வை
எப்படியிருக்கவேண்டுமென
நீ பிரயத்தனப்படுவது!!

இன்னும் என்னவெல்லாம்
இருக்கிறதோ உன்னிடம் கற்றுக்கொள்ள!

மறக்காமல் அனைத்தையும்
சொல்லிக் கொடுத்துவிட்டுப் போ...
உன் பேரனை
உன்னைப்போலவே
வளர்க்கப் பயன்படட்டும்!!
- பத்மா சுவாமிநாதன்
...முத்தமும் மழையும்... 
முதல் துளி
மழை - என்
முகம்தனை
தொடுகையில்...

இதழ் கொண்டு
நீ - எந்தன்
இமை தொட்ட
ஞாபகம்...

முற்றும்
நனைத்துவிட்டுப் போ!
இல்லையேல்
மூச்சடைத்துப் போவேன் நான்!!
- பத்மா சுவாமிநாதன்